தர்மபுரி: நள்ளிரவில் வி.ஏ.ஓ-வை கொல்ல முயற்சி - அதிர்ச்சி பின்னணி

கிராம நிர்வாக அதிகாரி ஒருவரை நள்ளிரவில் கொல்ல முயற்சி
தர்மபுரி: நள்ளிரவில் வி.ஏ.ஓ-வை கொல்ல முயற்சி - அதிர்ச்சி பின்னணி

தூத்துக்குடி மாவட்டத்தில் பணியிலிருந்த போதே கிராம நிர்வாக அதிகாரி லூர்து பிரான்ஸ் பட்டப் பகலில் கனிம வளம் கும்பலால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் தற்போது தர்மபுரி மாவட்டத்திலும் கனிம வளக் கொள்ளையைத் தடுக்க முயன்ற கிராம நிர்வாக அதிகாரி ஒருவரை நள்ளிரவில் கொல்ல முயற்சித்த சம்பவம் பெரும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், மெணசி கிராம நிர்வாக அதிகாரி இளங்கோ. இளம் வயதுடைய இவர் துணிச்சல் மிக்கவர் எனப் பெயரெடுத்தவர். அரூர் அருகே உள்ள எட்டுப்பட்டி அழகிரி நகர் அக்கிரகாரம் பகுதியைச் சார்ந்தவர். கடந்த 1.05. 2023 அன்று நள்ளிரவு மெணசி பகுதியில் கனிமவளக் கொள்ளை திருடப்படுவதாக இளங்கோவுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. மழை பெய்து கொண்டிருந்த நள்ளிரவையும் பொருட்படுத்தாமல் கனிம வளக் கொள்ளை கும்பலை கையும் களவுமாகப் பிடிப்பதற்காக சம்பவ இடத்திற்கு தனது இரு சக்கர வாகனத்தில் விரைந்துள்ளார்.

அப்போது குண்டல மடுவு, காளியம்மன் கோவில் அருகில் உளி கற்களை ஏற்றிக்கொண்டு டிராக்டர் ஒன்று அதிவேகமாகச் சென்றது. அதனைத் தடுத்து நடவடிக்கை எடுப்பதற்குக் கிராம நிர்வாக அதிகாரி இளங்கோ முயன்றுள்ளார். அந்த டிராக்டர் நிற்காமல், தடுத்த இளங்கோ மீது ஏற்றிக் கொல்லும் வகையில் வேகமாக இயக்கப்பட்டுள்ளது.

இதனைச் சற்றும் எதிர் பாராத இளங்கோ அதிர்ச்சியுடன் லாவகமாகத் தப்பியுள்ளார். பின்னர் அந்த TN 29 TZ2538 பதிவு எண் கொண்ட அந்த வாகனம் குறித்து விசாரித்தபோது, மெணசி பகுதியைச் சேர்ந்த முனுசாமியின் மகன் ராகவன் என்பவருக்குச் சொந்தமானது எனத் தெரிய வந்துள்ளது.

ராகவன் சொந்தமாக ஜேசிபி இயந்திரம் கொண்டு கனிமவள வளங்களைத் திருடி தனது டிராக்டர் மூலமாக விற்பனை செய்து வந்ததும் கிராம நிர்வாக அதிகாரியின் கவனத்திற்கு வந்துள்ளது. இந்தக் கும்பலுக்கு மெணசி ஊராட்சி மன்ற தலைவர் அன்பரசு, பூத நத்தம் ஊராட்சி மன்ற தலைவர் அருணாச்சலம், துணைத் தலைவர் பெருமாள் ஆகியோர் உதவியாக இருப்பதாகவும் தெரிய வந்தது.

இந்தக் கும்பலிடம் இருந்து தற்போது கிராம நிர்வாக அதிகாரி இளங்கோவுக்கு ஏற்கெனவே மிரட்டல்கள் வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து கிராம நிர்வாக அதிகாரி இளங்கோ கூறுகையில், ‘’இந்தப் பகுதியில் நேர்மையாக பணியாற்றி வருகிறேன். பட்டியல் இன சார்ந்தவர் என்பதால் எனக்கு இந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் பெரும் அச்சுறுத்தலை கொடுத்து வருகிறார்கள். இடையூறாக இருந்தால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி வருகின்றனர். இது குறித்து மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியருக்கு புகார் தெரிவித்துள்ளேன். இச்சம்பவம் குறித்து காவல்துறையில் உரிய ஆவணங்களுடன் புகார் தெரிவித்துள்ளேன்’’ எனக் கூறுகிறார்.

இதுகுறித்து பாப்பிரெட்டிப்பட்டி இன்ஸ்பெக்டர் லதாவிடம் பேசினோம். ‘’கிராம நிர்வாக அலுவலர் இளங்கோ மீது கடந்த கொலை முயற்சி சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம்’’என்று கூறி முடித்துக் கொண்டார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com