கால்நடைத் தீவன முறைகேடு மற்றும் அரசுக்கு ரூ.22.5 கோடி இழப்பு ஏற்படுத்திய வழக்கில் 9 ஆண்டுகளுக்கு பின்னர் குஜராத் மாநில பா.ஜ.க முன்னாள் அமைச்சர் விபுல் சவுத்ரிக்கு 7 ஆண்டு சிறை விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
குஜராத் மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தில் கடந்த முறை ஆட்சியில் இருந்த பா.ஜ.க அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது ஊழல் புகார் சுமத்தப்பட்டுள்ளது.
இதில் கடந்த பல ஆண்டுகளாக ஏராளமான வழக்குகள் விசாரணை செய்யப்படாமல் நிலுவையில் இருந்து வருவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன.
இந்நிலையில் போனஸ் வழங்குவதில் முறைகேடு மற்றும் 1,932 பால்பண்ணை ஊழியர்களிடம் இருந்து சவுத்ரி ரூ.14 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது.
மேலும் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு முறையாக மாட்டுத் தீவனத்தை வழங்காமல் அரசுக்கு ரூ.22.5 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக பா.ஜ.க முன்னாள் அமைச்சர் விபுல் சவுத்ரி மீது வழக்கு தொரப்பட்டது.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 22 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அவர்களில் 3 பேர் இறந்துவிட்டனர். இதனைத்தொடர்ந்து விசாரணையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் 9 ஆண்டுகளுக்கு பின்னர் பா.ஜ.க முன்னாள் அமைச்சர் விபுல் சவுத்ரி மற்றும் 14 பேருக்கு ஏமாற்றுதல், நேர்மையற்ற குற்றத்திற்காக 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து மெஹ்சானா மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது.
மேலும் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 4 பேரையும் அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் நீதிமன்றம் விடுவித்தது. இந்த வழக்கில் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 251 பக்க தீர்ப்பு வழங்கி உள்ளது.
இதில் பால்பண்ணைக்கு ரூ.22.5 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட 15 பேரும் குற்றவாளிகள் என மிக அழுத்தமாக கூறியுள்ளது.
இந்த வழக்கில் குற்றவாளிகளை உடனே சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்த தீர்ப்பு குஜராத் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.