'இந்திய வரலாற்றில் மறக்கப்பட்ட தலைவர் பிங்கலி வெங்கையா' - அண்ணாமலை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

வரலாற்றில் மறக்கப்பட்ட தலைவர்களில் ஒருவர்தான் பிங்கலி வெங்கையா என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பிங்கலி வெங்கையா
பிங்கலி வெங்கையா

இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக நாடுகள் ஒவ்வொன்றிற்கும் தனித்தன்மையும், தனி அடையாளமும் உண்டு. ஒரு நாட்டின் தேசியக் கொடி அந்நாட்டின் பெருமையையும், மகத்துவத்தையும் விளக்கும் சின்னமாக விளங்குகிறது. சர்வதேச அரங்கில் இந்தியாவின் தனிச் சிறப்புமிக்க அடையாளமாக, இந்திய சுதந்திரக் கொடி திகழ்ந்து வருகின்றது.

சுதந்திர போராட்டத்தின் பொழுது தேசியக் கொடியை பாதுகாப்பதற்காக தங்கள் உயிரையும் இழந்த பல வீரர்கள் உண்டு. இத்தனை மதிப்பும், மரியாதையும் மிக்க மூவர்ணக் கொடியை உருவாக்கிய மாமனிதர் பிங்கலி வெங்கையா. சுதந்திரப் போராட்ட வீரர், கல்வியாளர், எழுத்தாளர், மொழியியலாளர் எனப் பன்முக தன்மைக் கொண்டவர்.

வெங்கையா, இரண்டு பெயர்களால் பிரபலமாக அறியப்பட்டார்.ஒன்று வைரச் சுரங்கத்தில் அவரது நிபுணத்துவத்திற்காக "டைமண்ட் வெங்கையா " என்றும் மற்றொன்று வேளாண்மையின் மீது கொண்ட அதீத ஆர்வம் காரணமாக பருத்திச் சாகுபடியில் ஈடுபட்டிருந்ததால், இதனால் "பருத்தி வெங்கையா" என்றும் அழைக்கப்பட்டார்.

பிங்கலி வெங்கையா தென்னாப்பிரிக்காவில் பிரிட்டிஷ் ராணுவத்தில் பணியாற்றியபோது, ஒரு சம்பவம் வெங்கய்யாவின் மனதில் ஆழமாக பதிந்தது. இங்கிலாந்து தேசியக் கொடியான "யூனியன் ஜாக்கிற்கு" வணக்கம் செலுத்துமாறு வீரர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

அந்த நேரத்தில் பிங்கலி வெங்கையா கொடிக்கு வணக்கம் செலுத்தினாலும், அவரது தேசபக்தி உணர்வுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்தச் சம்பவமும், மகாத்மா காந்தியின் இந்திய சுதந்திரப் போராட்டமும் வெங்கையாவை சுதந்திரப் போராட்ட வீரராக மாற்றியது.

1906 - ஆம் ஆண்டு, கல்கத்தாவில் தாதாபாய் நௌரோஜி தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டங்களில் பிரிட்டிஷ் கொடி ஏற்றியது அவருக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவங்கள், இந்திய நாட்டிற்காகத் தனியொரு கொடியை வடிவமைக்க வேண்டும் என்று பிங்காலி வெங்கையாவிற்கு தூண்டுகோலாக அமைந்தது.

1916 ஆம் ஆண்டு, இந்திய கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் வரலாறு ஆகியவை ஒத்துப்போகும் வகையில், 30 வெவ்வேறு கொடிகளின் வரைவுகளை வடிவமைத்து “இந்திய தேசியக் கொடி” என்ற புத்தகத்தை வெளியிட்டார்.

பின்னர் விஜயவாடாவில் மகாத்மா காந்தியைச் சந்தித்த போது, அந்த சிறு புத்தகத்தை காட்டினார். காந்தி இந்த வடிவமைப்பைக் கண்டு மகிழ்ந்து, தேசியக் கொடியின் அவசியத்தை ஒப்புக்கொண்டார். 1921 ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய காங்கிரஸ் கூட்டத்தில் புதிய கொடி ஒன்றை வடிவமைக்க வெங்கையாவைக் கேட்டுக் கொண்டார்.

இதற்கு அவர் எடுத்துக்கொண்ட அவகாசம் வெறும் மூன்று மணி நேரம் மட்டுமே. அந்த கொடியில் சிவப்பு வண்ணமும் பச்சை வண்ணமும் இருந்தது. பின்னர் மகாத்மா காந்தியின் அறிவுறுத்தலின் படி, கொடியில் அமைதியையும், அகிம்சையையும் வெளிப்படுத்தும் விதமாக வெண்மை நிறம் சேர்க்கப்பட்டு நடுவே கை ராட்டை கொண்ட கொடி அதிகாரப்பூர்வ இந்திய தேசிய கொடியாக அமைக்கப்பட்டது.

இந்திய நாட்டின் தேசியக் கொடியை வடிவமைத்தவர் என்ற போதிலும், தனது நற்பெயரையும், புகழையும் பணமாக்கிக்கொள்ளாமல், தனது இறுதிக்காலம் வரை எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தார். தனது மகன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உயிரிழக்க நேரிட்டபோதிலும் பணத்திற்காக யாரிடமும் நிற்காத மாமனிதர். 1963 ஜூலை 4- ஆம் நாள் உடல்நல குறைவால் காலமானார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு, விஜயவாடாவில் உள்ள அகில இந்திய வானொலி கட்டிடத்தில் பிங்கலி வெங்கையாவின் திருவுருவச்சிலையை அப்போதைய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் வெங்கையா நாயுடு மூலம் திறந்து வைத்தது.

இந்தியாவின் புகழை தேசியக் கொடியின் மூலம் உலக அளவில் அறிய செய்த பிங்கலி வெங்கையா நினைவு தினமான இன்று, அவரையும் சுதந்திர போராட்டத்தில் தேசியக் கொடிக்காக தங்கள் இன்னுயிரை இழந்த சுதந்திர போராட்ட வீரர்களையும் நினைவுகூர்ந்து, இந்திய தேசிய கொடிக்கு மரியாதை செய்து வணங்குவோம் என தெரிவித்துள்ளார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com