பெங்களூரு: அமித் ஷா விட்ட டோஸ் - திகைப்பில் தமிழக பா.ஜ.க நிர்வாகிகள்

அமித் ஷா
அமித் ஷா

'தமிழக பா.ஜ.க நிர்வாகிகள் அனைவரும் ஒற்றுமையுடன் வரும் நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை தொடங்க வேண்டும் என்றும், கோஷ்டி மோதலில் ஈடுபடுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு கடும் சவாலாக பார்க்கப்பட்ட உட்கட்சி போட்டியாளரான வானதி, திடுதிப்பென அவருக்கு சப்போர்ட் செய்துவிட்டுள்ள அறிக்கை அரசியல் ஆச்சரியத்தை உருவாக்கியுள்ளது.

வாட் இஸ் தி மேட்டர்?

பா.ஜ.க-வின் தேசிய மகளிரணி தலைவரான வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ சமீபத்தில் தனது சொந்த தொகுதியான கோவை தெற்கில் கோடைகால நீர்மோர் பந்தலை திறந்து வைத்தார்.

அதற்கான போர்டில் பிரதமர் மோடியின் போட்டோ மற்றும் வானதியின் போட்டோ 2 மட்டுமே இருந்ததே தவிர மாநில தலைவரான அண்ணாமலையின் போட்டோ இல்லை.

இதை அண்ணாமலையின் ஆதரவாளர்கள் சுட்டிக்காட்டி, ‘மாநில தலைவரின் புகைப்படம் இல்லாமல் இப்படி ஒரு எம்.எல்.ஏ நிகழ்வு நடத்துவது சரியா?’ என்று சோஷியல் மீடியாவில் கொளுத்திப் போட்டனர்.

அதற்கு வானதியின் ஆதரவாளர்களோ ‘அக்கா, தேசிய மகளிரணி தலைவர் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு பேசுங்கள். அவரொன்றும் உள்நோக்கத்தோடு மாநில தலைவரின் போட்டோவை தவிர்க்கவில்லை’ என்று பதிலடி தந்தனர்.

நாம் வானதியிடம் இதுபற்றி கேட்டபோது, ‘நன்றாக கவனியுங்கள். அந்த நீர்மோர் பந்தலை இரண்டு என்.ஜி.ஓ-க்கள்தான் நடத்துகிறார்கள். அவர்கள் வைக்கும் போர்டில் நான் என்ன உட்கட்சி அரசியல் பண்ணிட முடியும்?’ என்று காட்டமானார்.

ஆனாலும், அண்ணாமலை மற்றும் வானதி இரு தரப்புக்கும் இடையில் ஒரு ஈகோ யுத்தம் நிகழ்கிறது. கோவையில் அண்ணாமலைக்கு ஆகாத டீம் ஒன்று பா.ஜ.க-வில் இருக்கிறது. இவர்கள் வயது. அரசியல் அனுபவம் ரீதியில் அண்ணாமலையை சற்றே டவுன் செய்கிறார்கள் என்பது சிலரது ஆதங்கம்.

இந்த கோஷ்டி அரசியலை உறுதிப்படுத்தும் விதமாக தொடர்ந்து ஆங்காங்கே இருந்து புகைச்சல்கள் கிளம்பியபடிதான் இருந்தன. இந்த நிலையில் வானதி சீனிவாசன் நேற்று (11ம் தேதி) வெளியிட்டிருக்கும் அறிக்கையை பார்த்தால் அப்டியே ஷாக்காகிறது. ’திராவிட மாடல் என்பது வாரிசு அரசியலை மையப்படுத்திதான் என்பதை தி.மு.க மீண்டும் நிரூபித்துள்ளது’ என்று ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அதில் ‘எங்கள் பா.ஜ.க மாநில தலைவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்போம் என்று தி.மு.க குடும்பமே சேர்ந்து நோட்டீஸ் அனுப்புகிறார்கள்.

அப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் ஆடியோவில் சிக்கிய மாஜி நிதியமைச்சர் தியாகராஜன் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

திடுதிப்பென அண்ணாமலைக்கு சப்போர்ட் பண்ணி வானதி இப்படி பேசியது பா.ஜ.க-வில் மட்டுமில்லாது அரசியல் அரங்கிலேயே பெரிய ஆச்சரியத்தை கிளப்பியது.

போட்டோவைகூட போடாமல் பந்தல் அரசியல் செய்தவர்கள் என்ன திடீரென சகோதரர் மீது பாச மழை? இதன் பின்னணி என்ன? என்று கமலாலயம் சைடில் விசாரித்தால், கர்நாடகா தேர்தலுக்கு பொறுப்பு வழங்கப்பட்டிருந்த நிலையில் அங்கேயே முகாமிட்டிருந்தார் மாநில தலைவர் அண்ணாமலை.

மகளிரணியின் தேசிய தலைவர் எனும் முறையில் வானதியும் அங்கே பிரசாரத்துக்கு சென்றார். அப்போது பிரசாரத்திற்கு வந்த அமித்ஷா கர்நாடாகவில் பிரசாரத்தில் இருந்த தமிழக பா.ஜ.க நிர்வாகிகளை அழைத்து பேசினார். கர்நாடகா மாநில தேர்தல் முடிந்த கையோடு தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான தயாரிப்பு பணிகளை ஆரம்பியுங்கள் என்றார்.

அதோடு மட்டுமில்லாமல், தமிழக பா.ஜ.க-வில் உள்ள கோஷ்டி பூசல் பற்றி சில விஷயங்களை புள்ளி விபரத்தோடு எடுத்துப் போட்டவர் ‘இன்றே, இந்த நொடியே இந்த உட்கட்சி பிரச்னைகளை மறந்துட்டு எல்லாரும் இயக்க வளர்ச்சியை மட்டுமே மனசுல வெச்சு உழைங்க.

அவருக்கு இவரை பிடிக்காது, இவருக்கு அவரை பிடிக்காது, இவரு அந்த டீம், அவரு இந்த டீம்னு இனிமேல் எனக்கு ரிப்போர்ட் வந்தால் அது நல்லா இருக்காது’ என்று அறிவுரை வழங்கி அனுப்பினார்.

அதனால், இனிமே தமிழ்நாட்டுல எங்க கட்சி தலைவர்கள் விரிசலை மறந்து ஒற்றுமையோடு செயல்படுவாங்கன்னு நம்புறோம்” என்றார்கள்.

- கோவை சக்தி

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com