முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று மூன்றாம் ஆண்டு தொடங்கிய நிலையில் அமைச்சரவை மாற்றங்கள் நடைபெற்றுள்ளது. பால்வளத்துறை அமைச்சரான ஆவடி நாசர் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மன்னார்குடி தொகுதி எம்.எல்.ஏ-வும், திமுக எம்.பி, டி.ஆர்.பாலுவின் மகனுமான டி.ஆர்.பி ராஜா அமைச்சரவையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளார்.
பால்வளத்துறை அமைச்சராக ஆவடி நாசர் பொறுப்பேற்றது முதலே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வந்தார். பால் கொள்முதல் முதல் விற்பனை வரையில் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டு வந்தது. நாளொன்றுக்கு 235 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட வேண்டிய நிலையில், 29 லட்சம் லிட்டரை மட்டுமே ஆவின் நிர்வாகம் கொள்முதல் செய்தது. இதனால் பல மாவட்டங்களில் பால் விநியோகத்தில் தடை ஏற்பட்டதாகத் தகவல் வெளியானது.
பால் கொள்முதல், நிர்வாக சீர்கேடு என பால்வளத்துறைக்கு தொடர்ந்து கெட்ட பெயர் ஏற்பட்டது. இதுதவிர, பொதுவெளியிலும் ஆவடி நாசர் நடந்து கொண்ட விதம் அரசுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக, திருவள்ளூரில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்ட நிகழ்வு நடக்கும் இடத்தை ஆய்வு செய்தபோது, நாசர் அமர்வதற்கு சேர் கிடைக்கவில்லை. இதனால் கோபமடைந்து தி.மு.க தொண்டர் மீது அவர் கல் வீசிய காட்சிகள் வைரலானது.
‘தி.மு.க ஆட்சி வந்ததற்கு காரணமே கிறிஸ்துவர்களின் ஜெபம்தான்’ என நாசர் பேசிய பேச்சுகள் விவாதத்தை ஏற்படுத்தியது. சென்னை மெரினாவில் கருணாநிதியின் நினைவிடத்துக்குச் சென்றபோது அவருடைய காலணியை உதவியாளர் தூக்கி வந்த காட்சிகள், மகன் ஆசிம்ராஜாவால் ஏற்பட்ட கெட்ட பெயர் என அனைத்தும் சேர்ந்து ஆவடி நாசரின் பதவி பறிப்புக்கு காரணமாக அமைந்துவிட்டதாக தி.மு.க நிர்வாகிகள் பேசி வருகின்றனர்.
மேலும், தமிழக அமைச்சரவையில் டெல்டா பகுதி எம்.எல்.ஏக்கள் இடம்பெறாமல் இருந்து வந்த நிலையில் டி.ஆர்.பி.ராஜா புதிய அமைச்சராக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார். அவர் வரும் 11ம் தேதி காலை 10.30 மணியளவில் பதவியேற்றுக் கொள்ள இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. டி.ஆர்.பி.ராஜா பதவி ஏற்ற பிறகு அவருக்கான இலாகா தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட உள்ளது. அதில் டி.ஆர்.பி.ராஜா -வுக்கான இலாகா என்ன? என்பது பற்றி தெரியவரும். மேலும் மற்ற அமைச்சர்களுக்கு ஏதேனும் இலாகாக்கள் மாற்றி வழங்கப்பட்டுள்ளதா என்ற விவரமும் அதிகார பூர்வமாக தெரியவரும்.