”அண்ணாமலைக்கு ஓராண்டு காலம் சிறை தண்டனை நிச்சயம்” - ஆர்.எஸ். பாரதி பேட்டி

திமுகவின் பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட திமுகவின் முன்னோடிகள் மீது ஏப்ரல் 14 ஆம் தேதி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவதூறாக புளுகு மூட்டைகளை அவிழ்த்துவிட்டார்
பேட்டியளித்த ஆர்.எஸ்.பாரதி
பேட்டியளித்த ஆர்.எஸ்.பாரதி

அண்ணாமலைக்கு நிச்சயமாக ஓராண்டு காலம் சிறை தண்டனை பெற்று தரப்படும் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்.14-ம் தேதி ’திமுக ஃபைல்ஸ்’என்ற பெயரில் திமுக தலைவர்களின் சொத்து பட்டியலை வெளியிட்டார். அதில் திமுக அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு, பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம் சிகாமணி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உதயநிதி ஸ்டாலின், எம்.பி.க்கள் கனிமொழி, ஆற்காடு வீராசாமி மகன் கலாநிதி வீராசாமி, டி.ஆர். பாலு, ஜெகத்ரட்சகன், துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த், மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன், கலாநிதி மாறன் ஆகிய 12 பேரின் சொத்து பட்டியல் என்ற பெயரில் சில ஆவணங்கள் வெளியிடப்பட்டது.

இந்த பட்டியல் தொடர்பாக, முதல்வர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்ட பல திமுக தலைவர்கள் அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பினர். இதனை தொடர்ந்து திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக பொருளாளருமான டி.ஆர்.பாலு அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

இந்த நிலையில், இது குறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறும் போது, “திமுகவின் பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட திமுகவின் முன்னோடிகள் மீது ஏப்ரல் 14 ஆம் தேதி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவதூறாக புளுகு மூட்டைகளை அவிழ்த்துவிட்டார். அவர் பேட்டி அளித்த அரை மணி நேரத்திற்குள் அவருக்கு திமுக சார்பில் நாங்கள் பதில் தந்து விட்டோம். அந்தக் கூட்டத்தில் அவர் சொன்ன அந்த அவதூறான வாசகங்களைத் திரும்பப் பெற வேண்டும். மன்னிப்பு கூற வேண்டும் என்று திமுக சார்பில் நோட்டீஸ் அனுப்பி ஏறத்தாழ ஒரு மாதக் காலம் ஆகியும் இதுவரை பதில் சொல்லவில்லை. அறிக்கை விடுகிறார்.

ஆனால், சட்டப்பூர்வமான நோட்டீஸ் வரவில்லை. ஆகவே ஒரு மாதக் காலம் அவருக்கு போதுமான அவகாசம் கொடுத்த பிறகும் அவர் மன்னிப்பு கேட்காததாலும், சொன்ன வாசகங்களை திரும்பப் பெறாததாலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. யார் மீதும் பொய் வழக்கு போடும் வழக்கம் திமுகவிற்கு கிடையாது. அதோடு மட்டுமல்ல, திமுக சார்பில் போட்ட அத்தனை வழக்குகளிலும் நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம் என்பது வரலாறு. அந்தவகையில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அண்ணாமலை மீது டி.ஆர்.பாலு வழக்கு தொடர்ந்திருக்கிறார். நிச்சயமாக அண்ணாமலைக்கு ஓராண்டுக் காலம் சிறை தண்டனை கிடைக்கும் என்பதை நான் தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன். அண்ணாமலைக்கு நிச்சயமாக தண்டனை பெற்று தரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com