'தமிழகத்தில் எங்கும் மது, எதிலும் மது' - அன்புமணி ராமதாஸ் ஆவேசம்

இந்த ஆண்டு அரசு தேர்வுகளில், கடைசியில் உள்ள 15 மாவட்டங்கள் வட மாவட்டங்கள்தான்
அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்

'நாங்கள் எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்று சொல்கிறோம். ஆனால் இங்கு எங்கும் மது, எதிலும் மது என்று உள்ளது' என பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

தர்மபுரியில் அதியமான் கிரிக்கெட் கிளப் நடத்தும் மாபெரும் ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டி தர்மபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இன்று முதல் ஜூன் 4 வரை, 14 நாட்கள் போட்டிகள் நடைபெறுகிறது.

இந்த போட்டியினை பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். தொடர்ந்து பலூன் மற்றும் வெண்புறாக்களை வானில் பறக்க விட்டார்.

இந்த கிரிக்கெட் போட்டி தர்மபுரி, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பாலக்கோடு, பென்னாகரம் உள்ளிட்ட 5 சட்டமன்ற தொகுதியில், 15 மையங்களில் 830 அணிகளுக்கும்மேல் கலந்து கொண்டு விளையாட உள்ளனர்.

முதல் பரிசாக 2 லட்சம் ரூபாயும், 2ம் பரிசாக 1 லட்சம் ரூபாயும், 3ம் பரிசாக 50 ஆயிரம் ரூபாய் பரிசாகவும் கோப்பையும் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வழங்குகிறார்.

போட்டியை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ், 'கோடை விடுமுறை காலத்தில் மாணவர்கள் திசை மாறி போய்விடக்கூடாது என்பதற்காக கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது.

கொரோன காலத்திற்கு பிறகு இளைஞர்கள் கஞ்சா, மது என திசை மாறி போய்விட்டார்கள். இதனை நல்வழிப்படுத்தவே, இந்த போட்டிகள் நடநத்தப்படுகிறது. இதில் சாதி, மதம் கடந்து அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.

காவிரி ஆறு தர்மபுரியில் தான் நுழைகிறது. காவிரியில் அதிகாமாக வருகிற தண்ணீரை ஏரி குளங்களில் நிரப்ப வலியுறுத்தி வருகிறோம்.

கடந்த ஆண்டு 600 டி.எம்.சி. தண்ணீர் வீணாக சென்றுள்ளது. தர்மபுரி மாவட்டத்திற்கு 3 டி.எம்.சி. தண்ணீர் இருந்தால் போதும். இந்த திட்டம் நிறைவேற்றினால், 3 இலட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்பு தேடி வெளியூர் போவது தடுக்க முடியும்.

இந்த ஆண்டு அரசு தேர்வுகளில், கடைசியில் உள்ள 15 மாவட்டங்கள் வட மாவட்டங்கள் தான். இந்த பகுதியில் தான் டாஸ்மாக் விற்பனை அதிகமாக இருந்து வருகிறது. இந்த மாவட்ட மக்களுக்கு என்ன திட்டங்களை அரசு கொடுத்துள்ளது? இது என்ன திராவிட மாடல் அரசு?

மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அரசு மது விற்பனை செய்யாவிட்டால், கள்ளச்சாராயம் பெருகும் என அரசு மதுக்கடைகளை திறந்துள்ளது. ஆனால், கள்ளச்சாராயம் விற்பனை அதிகரித்துள்ளது. இது ஆட்சியாளர்கள், காவல் துறையினர், அரசியல் வாதிகள் எல்லோருக்குமே தெரிந்துதான் நடைபெறுகிறது.

இப்போது உள்ள மதுவிலக்கு துறை அமைச்சர், மக்கள் மீது மதுவை திணித்து வருகிறார். இவர் தி.மு.க ஆட்சிக்கு கெட்ட பெயரை வாங்கி தருவார். கள்ளச்சாராயம் குடித்து 23 பேர் தான் இருந்துள்ளனர். ஆனால் அரசு விற்பனை செய்யும் சாராயம் குடித்து பலபேர் உயிரிழந்துள்ளனர்‌.

தமிழ்நாட்டில் மது விற்பனையைக் கொண்டு வந்தது அ.தி.மு.க.தான். தற்பொழுது 25 வயது இளைஞர்கள் மது இல்லாமல் இருக்கமுடியாது. நாங்கள் எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்று சொல்கிறோம். ஆனால் இங்கு எங்கும் மது, எதிலும் மது என்றுதான் உள்ளது. இதுதான் திராவிட மாடல் அரசு?

தமிழகத்தில் படிப்படியாக மது விலக்கு என்று சொன்னார்கள். இதுவரை எத்தனை கடைகள் மூடப்பட்டுள்ளது? வருவாய் குறைவாக இல்லாத கடைகளை மூடுகிறார்கள். தமிழக மக்கள் மீதும், பெண்கள் மீது அக்கரையிருந்தால், மது விலக்கு கொண்டு வர வேண்டும்.

தமிழ்நாட்டில் கள்ள மது நேரடியாக கடைகளுக்கு செல்கிறது. இதனை சி.பி.ஐ. விசாரணை நடத்தி கண்டுபிடிக்க வேண்டும். ஏனென்றால், மது விற்பனை செய்யும் 11 ஆலைகளில் மின்சாரம், தண்ணீர் எவ்வளவு பயன்படுத்தப்படுகிறது என்பதன் மூலம் கண்டறிய முடியும். இதனை சி.பி.ஐ. விசாரணை செய்ய வேண்டும்

தமிழ்நாட்டில் வட மாவட்டங்களில் அதிகப்படியாக தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் வன்னியர் சமூக மக்கள் அதிகமாக உள்ளனர். இதில் பட்டியல் சமூக மக்களுக்கு இட ஒதுக்கீடு உள்ளது. ஆனால் அது போதாது. வன்னியர் சமூக மக்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீட்டை உடனடியாக கொண்டு வந்து சமூக நீதியை நிலை நாட்ட வேண்டும்.

கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. இதனை தமிழகத்தின் கண்ணோட்டத்தில் இருந்து பார்க்கிறேன். ஏனென்றால், மேகதாதுவில் அணைக்கட்ட, பா.ஜ.க. அழுத்தம் கொடுக்காது. ஏனென்றால் அது காங்கிரஸ் கட்சிக்கு நற்பெயர் வந்துவிடும் என்பதால். இதனால் நமக்கு நல்லதுதான்' என தெரிவித்தார்.

- பொய்கை. கோ.கிருஷ்ணா

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com