மகாராஷ்டிரா சட்டசபைக்கு கடந்த 2019-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. தேர்தலுக்குப் பின்னர் பா.ஜ.க - சிவசேனா கூட்டணி ஆட்சி அமையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து ஆட்சி அமைத்தது.
இந்த நிலையில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 2 ஆக உடைந்தது. இதனால் உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணி அரசு கவிழ்ந்தது.
இதனையடுத்து ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா- பா.ஜ.க புதிய ஆட்சி அமைந்தது. தற்போது சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியும் இரண்டாக உடைந்துள்ளது.
தேசியவாத காங்கிரஸின் 30 எம்.எல்.ஏ-க்களுடன் சரத்பவாரின் சகோதரர் மகன் அஜித்பவார், மகாராஷ்டிராவில் ஆளும் பா.ஜ.க-ஷிண்டே சிவசேனா ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
அத்துடன் மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதலமைச்சராக அஜித்பவார் பதவி ஏற்றுக் கொண்டார். மகாராஷ்டிரா மாநில ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில், அஜித் பவாருக்கு ஆளுநர் ரமேஷ் பைஸ் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
அஜித் பவாருடன் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சகன் புஜ்பால், தனஞ்சய் முண்டே, திலீப் வால்ஸ் பாட்டீல் உட்பட மொத்தம் 9 மூத்த தலைவர்கள் அமைச்சர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர்.