மலிவு விளம்பரத்திற்காக அண்ணாமலை விமர்சனம் செய்கிறார் - புதுச்சேரி அன்பழகன் பேட்டி

புதுச்சேரியில் சிறுபான்மையினர் வாக்குகள் கிடைக்காமல் நாங்கள் தோல்வியடைந்ததற்கு பாஜக தான் முக்கிய காரணம்.
அண்ணாமலை, அன்பழகன்
அண்ணாமலை, அன்பழகன்

அண்ணாமலை ஒரு அரவேக்காட்டு தலைவர் என்பதை அவ்வப்போது நிருபித்து வருகிறார் என புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் விமர்சித்துள்ளார்.

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற கட்சி தலைவருமான அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், ”தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது தகுதி, வயது, அனுபவம் எதையும் புரிந்துகொள்ளாமல் அதிமுக கூட்டணி கட்சி என்பதை கூட நினைக்காமல் அதிமுகவின் ஒப்பற்ற தலைவர்களை தொடர்ந்து விமர்சனம் செய்வதை புதுச்சேரி மாநில அதிமுக வன்மையாக கண்டிக்கிறது. மலிவு விளம்பரத்திற்காக அண்ணாமலை தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவி அம்மா ஆகியோர்களை பற்றி அவ்வப்போது விமர்சனம் செய்து வருகிறார்.

இந்திய நாட்டின் பிரதமராக மோடி வரக்கூடாது என்ற சதி செயலில் அண்ணாமலையின் செயல்பாடு உள்ளது. பேரிறஞர் அண்ணா வாழ்ந்த காலத்தில் அப்போது இந்த மண்ணில் பிறக்காத அண்ணாமலை, தமிழ் மக்களின் நலனுக்காக போராடி வாழ்ந்த பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் போன்றவர்களை பற்றி பேசுவது அடிமுட்டாள் தனத்திற்கு ஒப்பான செயலாகும்.

அகில இந்திய அளவில் ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவராக செயல்படக்கூடிய தகுதியோ, திராணியோ அண்ணாமலைக்கு இல்லை என்பதை அவ்வப்போது நிருபித்து வருகிறார். அவர் மீது அவர் சார்ந்த கட்சி உரிய நடவடிக்கை எடுக்காததால் தனது மலிவு விளம்பரத்திற்காக அவ்வப்போது இதுபோன்று பேசி வருகிறார்.

தமிழகத்தில் 3, 4 சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் கூட அறிஞர் அண்ணாவின் பகுத்தறிவு கொண்ட கழகத்தினரின் வாக்குகளை பெற்றதால் தான் சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ளனர். அதே சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்த அண்ணாமலை விரக்தியின் விளிம்பில் இவைகளை மறந்து, தேவையற்ற கருத்துக்களை கூறி கூட்டணியில் குழப்பதை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார். அண்ணாமலை ஒரு அரவேக்காட்டு தலைவர் என்பதை அவ்வப்போது நிருபித்து வருகிறார்.

பேரறிஞர் அண்ணா மற்றும் அம்மாவை பற்றி விமர்சனம் செய்த தமிழக தகுதியற்ற பாஜக தலைவர் அண்ணாமலை புதுச்சேரியில் காலெடுத்து வைக்கும் போது அவர்களுக்கு சரியான பதிலடியை புதுச்சேரி மாநில அதிமுக கொடுக்கும். தன்னுடைய உடலில் உள்ள கொழுப்பு வாய்வழியாக அவ்வப்போது வெளியிடுவதை அண்ணாமலை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

அதிமுகவுடன் கூட்டணி இல்லையென்றால் தென்னிந்தியாவிலேயே பாஜக என்ற ஒரு கட்சி இடம் தெரியாமல் போயிருக்கும் என்பதை அண்ணாமலை போன்ற சிறு பிள்ளைகள் உணர்ந்து கொள்வது நல்லது.

தமிழகத்தில் அதிமுகவின் என்ன நிலைபாடோ அது தான் புதுச்சேரிக்கும். எடப்பாடியாரின் முடிவு தான் எங்களின் வேதவாக்கு.

புதுச்சேரியில் சிறுபான்மையினர் வாக்குகள் கிடைக்காமல் நாங்கள் தோல்வியடைந்ததற்கு பாஜக தான் முக்கிய காரணம். எங்களை பொறுத்தவரை என்.ஆர்.காங்கிரசுடன் எங்கள் கூட்டணி தொடரும்.தற்போது எங்கள் தலைமை பாஜகவுடன் கூட்டணி இல்லையென்று அறிவித்துள்ளது. அது மிக்க சந்தோஷமான செய்தியாகும். அதிமுக தொண்டர்கள் தலைமையின் இந்த அறிவிப்பால் மகிழ்ச்சியாக உள்ளனர்” என்றார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com