ஆதிச்சநல்லூர்: "விதையை விதைத்தவர் பிரதமர் மோடி" - வானதி சீனிவாசன் கருத்து

தமிழர்களின் வாழ்வியலையும் எடுத்துரைக்கும் காலச்சுவடுகளை அள்ள, அள்ள குறையாமல் கொடுத்த களஞ்சியம்தான் ஆதிச்சநல்லூர்
ஆதிச்சநல்லூரில் கிடைத்த பொருட்கள்
ஆதிச்சநல்லூரில் கிடைத்த பொருட்கள்

உலகெங்கும் நம் தமிழ் இனத்தின் பெருமை தழைத்தோங்கும். அதற்கான விதையை விதைத்தவர் பிரதமர் மோடி. இதை நாளை வரலாறு பேசும் என தெரிவித்துள்ளார் பா.ஜ.க தேசிய மகளிர் அணித் தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன்.

இது தொடர்பாக, சமூகவலை பக்கம் மூலம் அறிக்கை வெளியிட்டுள்ள வானதி சீனிவாசன், "கல் தோன்றி மண் தோன்றா காலத்தே, முன் தோன்றிய மூத்த குடி நம் தமிழ் குடி". அத்தகு பெருமைமிக்க தமிழ் இனத்தின் தொன்மையையும், பெருமையையும் உலகுக்கு பறைசாற்றும் சான்றுகள் கிடைக்கப்பெற்ற தொல்லியல் பூமிதான் ஆதிச்சநல்லூர்.

கீழடியைவிட தொன்மையான வரலாற்று சான்றுகளையும், ஆதி தமிழர்களின் வாழ்வியலையும் எடுத்துரைக்கும் காலச்சுவடுகளை அள்ள, அள்ள குறையாமல் கொடுத்த களஞ்சியம் தான் ஆதிச்சநல்லூர். உலக நாகரிகத்தின் தொட்டில் என்று சொல்லுமளவுக்கு வரலாற்று பொக்கிஷங்களை உள்ளடக்கியது ஆதிச்சநல்லூர்.

தூத்துக்குடி தாமிரபரணி ஆற்றின் கரையோரம் அமைந்த ஆதிச்சநல்லூர், இரும்புக்காலம் மற்றும் பெருங்கற்கால தொல்லியல் இடமாகும். ஆதிச்சநல்லூரில் தொல்லியல் ஆராய்ச்சி செய்த ஆய்வாளர்கள், உலகின் மிகவும் தொன்மையான நாகரீகம் என்று கருதப்படும் சிந்து சமவெளி நாகரீகத்திற்கு இணையானது ஆதிச்சநல்லூர் நாகரீகம் என்று வியந்தனர்.

உலக நாகரீகத்தை எழுத எத்தனித்தால் அதை ஆதிச்சநல்லூரில் இருந்து தான் துவங்க வேண்டும் என்று கூறுமளவுக்கு பெருமை வாய்ந்தது ஆதிச்சநல்லூர்.

ஆகவே, இதன் முக்கியத்துவத்தை உணர்ந்த மத்திய பா.ஜ.க அரசும் பிரதமர் மோடியும், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் பெரும் முயற்சி செய்து, ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைத்திட அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டனர்.

அதன் விளைவாக தற்போது உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் ஆதிச்சநல்லூரில் அமையப்பெறவுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகஸ்ட் 5 -ம் தேதி அடிக்கல் நாட்டி அருங்காட்சியாக பணிகளை துவங்கி வைக்கவுள்ளார்.

தமிழர்களின் பெருமையையும், தொன்மையையும், சிறப்புக்களையும் காத்து உலகிற்கு எடுத்துரைப்பதில் முதன்மையாக திகழ்வது பா.ஜ.க அரசும் பிரதமர் மோடியும்தான்,

உலக நாகரீகத்தை எழுத முனைவோர் இனி ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகத்திலிருந்து முன்னுரை எழுத துவங்குவர். உலகெங்கும் நம் தமிழ் இனத்தின் பெருமை தழைத்தோங்கும். அதற்கான விதையை விதைத்தவர் பிரதமர் மோடி என்று வரலாறு பேசும் என தெரிவித்துள்ளார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com