"தமிழகத்தில் மின் சாதன பயன்பாட்டைப் பொறுத்துக் கூடுதல் கட்டணம் வசூல் கிடையாது" என தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.
ஏசி, வாட்டர் ஹீட்டர் உள்ளிட்ட மின்சாதனங்கள் பயன்படுத்தும் வீடுகளில், தேவைக்கட்டணம் விதிக்கப்பட இருப்பதாகத் தகவல் வெளியாகியிருந்தது. தமிழ்நாட்டில் ஏசி, வாட்டர் ஹீட்டர் உள்ளிட்ட மின்சார சாதனங்களைப் பயன்படுத்தும் வீடுகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக மின்சாரம் எடுக்கப்பட்டால் அதற்காகத் தேவை கட்டணம் என்ற பெயரில் கூடுதல் கட்டணம் விதிக்க மின்சார விதிகளில் திருத்தம் செய்ய அனுமதிக்கக் கோரி மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் மின்வாரியம் விண்ணப்பித்துள்ளதாகத் தகவல் வெளியானது. இது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் எதிர்ப்புத் தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில், இதற்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. ‘’தமிழகத்தில் மின் சாதன பயன்பாட்டைப் பொருத்து கூடுதல் கட்டணம் வசூல் கிடையாது. வீடுகளுக்கான நிலை கட்டணம் மீது அபராதம் வசூலிக்கப்படும் என்று பரவும் தகவல் தவறானது. வீடுகளுக்கு நிலை கட்டணம் வசூலிப்பதிலிருந்து 2022 செப்டம்பர் 10 முதல் விலக்கு அளித்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நிலை கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளித்தபின் கட்டணம் மீதான அபராதம் என்பது தவறான தகவல். மின் விதிகளில் உத்தேசிக்கப்பட்ட மாற்றங்கள் குறித்து கருத்துக் கேட்கப்பட்டுள்ளது. மக்களின் கருத்துக்களைப் பரிசீலனை செய்து இறுதி முடிவு எடுக்கப்படும்’’என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.