நீதிமன்றங்களில் மகாத்மா காந்தி மற்றும் திருவள்ளுவர் ஆகியோரை தவிர வேறு எந்த தலைவரின் சிலைகளும், உருவப் படங்களும் வைக்கக்கூடாது என தகவல் வெளியான நிலையில், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு திடீரென ட்விட்டரில் தி.மு.க-வை விமர்சனம் செய்துவிட்டு பின்பு அதை நீக்கிவிட்டதாக பரபரப்பு எழுந்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள நீதிமன்றங்களிலும், நீதிமன்ற வளாகங்களிலும் மகாத்மா காந்தி மற்றும் திருவள்ளுவர் ஆகியோரை தவிர வேறு எந்த தலைவரின் சிலைகளும், உருவப் படங்களும் வைக்கப்படக் கூடாது என, சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமைப் பதிவாளர் அனைத்து நீதிமன்றங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியதாக தகவல் வெளியானது.
இதற்கு, தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், டாக்டர் அம்பேத்கர் படத்தை நீதிமன்றத்தில் வைக்க வேண்டும் என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையும் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் நீதிமன்றங்களில் அம்பேத்கர் படத்தை அகற்றும் உத்தரவுக்காக தி.மு.க அரசை குஷ்பு, தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சனம் செய்திருந்தார்.
அதில் இந்திய அரசியலமைப்பை வடிவமைத்த அம்பேத்கரின் புகைப்படங்களை நீதிமன்றங்களில் வைக்க தி.மு.க அரசு மறுத்துள்ளது. இது தவறான செயல்" என தெரிவித்துவிட்டு பின்னர் இந்த பதிவை நீக்கிவிட்டார்.
ஆனால், அவரது பதிவின் ஸ்க்ரீன்ஷாட்டை எடுத்து விமர்சித்து உள்ள தி.மு.க செய்தித் தொடர்பு இணை செயலாளர் சையது ஹபீசுல்லா, பா.ஜ.க-வை சேர்ந்த குஷ்பு, தேவையின்றி தி.மு.க அரசை விமர்சனம் செய்துள்ளார்.
அம்பேத்கர் படம் தொடர்பாக நீதிமன்ற பதிவாளர் எடுத்த முடிவுக்கு தி.மு.க-வை எப்படி குற்றம் சொல்ல முடியும்?" என கேள்வி எழுப்பி உள்ளார். இதுதொடர்பாக குஷ்பு விளக்கம் ஏதும் அளிக்கவில்லை.