"விரைவில் மாநாடு - காத்திருக்கிறது தமிழ்நாடு... வா ! தலைவா !!" என்றெல்லாம் நடிகர் விஜய் ரசிகர்கள் சுவர் விளம்பரங்கள் எழுதி போஸ்டர்கள் அடித்து திருச்சியை கலக்கி வருகிறார்கள்.
தமிழகத்தில் கலைத்துறையில் இருந்து அண்ணாதுரை, எம் ஜி ஆர், கருணாநிதி, ஜெயலலிதா என பல முதலமைச்சர்களை கோடம்பாக்கம் உருவாக்கி இருக்கிறது. இதோ அந்த வரிசையில் அடுத்ததாக நடிகர் விஜய் வருகிறார்.
அவர் சும்மா இருந்தாலும் அவரது ரசிகர்கள் விடுவார்களா ? அவர் அரசியல் கட்சி தொடங்கினால்தானே குறைந்தபட்சம் மாவட்டச் செயலாளர் ஆக முடியும் என்கிற கனவில் மிதக்கிறார்கள் ரசிகர்கள். 'நடிகர் சிவாஜி, விஜயகாந்த், டி.ராஜேந்தர் ஆகியோரைவிட சூப்பர் அரசியல் செய்து விடலாம் என்று நம்புகிறார்கள் இந்த ரசிகர்கள்.
இந்த வழியில், வரும் 22-ஆம் தேதி பிறந்த நாள் கொண்டாட இருக்கும் நடிகர் விஜய்யை உசுப்பேற்றும் விதமாக, "திருச்சி என்றாலே திருப்பம்தான்... விரைவில் மாநாடு... காத்திருக்கிறது தமிழ்நாடு... வா ! தலைவா !!" என்றெல்லாம் சுவர் விளம்பரங்கள் எழுதியும், போஸ்டர்கள் அடித்தும் திருச்சியை கலக்கி வருகிறார்கள் விஜய் ரசிகர்கள்.
இது குறித்து, நாம் தமிழகத்தில் முதல் ரசிகர் மன்றத்தை தொடங்கியவரும் திருச்சி மாவட்டத் தலைவராக இருந்தவருமான ஆர்.கே. ராஜாவிடம் பேசினோம்.
"சென்னையில் பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் மாதாமாதம் கூட்டம் நடக்கும். கடந்த மாதம் நடந்த கூட்டத்தில் 'பிறந்த நாளை முன்னிட்டு விரைவில் மாநாடு நடத்த வேண்டும்' என்றும், 'மாவட்ட வாரியாக பூத் கமிட்டி அமைத்து அமைப்பை வலுப்படுத்துங்கள்; தளபதி விரைவில் கட்சி ஆரம்பிக்கப் போகிறார்' என்றும் தலைமையில் இருந்து தெரிவித்தனர்.
'வெவ்வேறு கட்சிகளில் இருப்பவர்கள் அதை விட்டு வெளியே வந்து தளபதி மக்கள் இயக்கத்தில் இணைந்து செயல்பட வேண்டும்' என்றும், 'முக்கியத் தலைவர்கள் பிறந்தநாள் அன்று மாவட்ட நிர்வாகிகள் ஆங்காங்கே உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய வேண்டும் என்றும் சொல்லி உள்ளார்கள்.
இப்படி, அவர்கள் மாநாடு நடத்துவது என்று முடிவு செய்துவிட்டால் மற்ற ஊர்களில் நடத்துவது அவ்வளவு பொருத்தமாக இருக்காது. எல்லா கட்சிகளுக்குமே திருச்சியில் நடத்தப்பட்ட மாநாடுதான் திருப்புமுனையை தந்துள்ளன.
அதேபோல், எங்கள் இளைய தளபதியும் முடிவு எடுத்து திருச்சியில் மாநாட்டை நடத்த வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைத்து அதற்கு முன்னோட்டமாக தான் இந்த சுவர் விளம்பரங்களை எழுதியுள்ளோம்.
தலைமை இன்னும் அப்படி எதையும் அறிவிக்கவில்லை. தளபதி அப்படி ஒரு முடிவை எடுத்து திருச்சியில் மாநாடு நடத்தினால் நாங்கள் அவரது கரத்தை வலுப்படுத்துவோம்.
ஆட்சியை இழந்த கட்சிகளே மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கு திருச்சியில் தான் திருப்புமுனை மாநாடு நடத்துவார்கள். அதனால்தான், நாங்கள் திருச்சியை வலியுறுத்துகிறோம்' என்றார்.
சில சங்கடங்களால் இளைய தளபதி என்னையும் என்னைப்போன்ற சிலரையும் அமைப்பிலிருந்து நீக்கி வைத்திருக்கிறார். அப்படி அவர் தூக்கி எறிந்தாலும் நாங்கள் போக மாட்டோம்.
ஏனென்றால், கடந்த 1993-ம் ஆண்டு முதல் முதலில் திருச்சியில்தான் நாங்கள் இளைய தளபதி மக்கள் இயக்கத்தை தொடங்கினோம்" என்றார் அவர்.
இன்னும் உறுதிப்படுத்தப்படாத ஒரு தகவல் திருச்சி ஜி.கார்னரில் மாநாடு நடத்துவதற்கு தளபதி விஜய் மக்கள் இயக்கம் பதிவு செய்து விட்டதாகவே தெரிவிக்கிறார்கள்.
விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட பொறுப்பாளர் குடமுருட்டி கரிகாலனிடம் கேட்டபோது, 'இயக்கத்திலிருந்து அப்படி எந்த அறிவிப்பும் இதுவரை வரவில்லை. ராஜா, அப்பா (சந்திரசேகர்) அணியில் இருக்கிறார்.
அவர்கள் தனியாகத்தான் செயல்படுகிறார்கள். அவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசலாம், அறிவிக்கலாம். நாங்கள் இளைய தளபதி அறிவிக்காத ஒரு விஷயத்தை குறித்து பேசமாட்டோம்.
ஏற்கனவே, அம்பேத்கர் பிறந்த நாளில் மாலை அணிவித்து மரியாதை செய்ய வேண்டும் என்று உத்தரவு வந்தது. அதை செயல்படுத்தினோம். அதன் பிறகு தலைவர்களின் பிறந்தநாள் நினைவு நாட்களுக்கு மரியாதை செலுத்த வேண்டும், அஞ்சலி செலுத்த வேண்டும் என்று சொல்கிறார்கள். அதையும் செய்கிறோம்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் திருச்சியில் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மாலையிட விஜய் மக்கள் இயக்கத்தின் மாநிலத் தலைவர் புஸ்ஸிஆனந்த் 1,000 பேருடன் வந்து கலந்து கொண்டார். அதற்கு மேல் நான் எதுவும் சொல்லக்கூடாது" என்றார்.
- திருச்சி ஷானு