ஸ்ரீபெரும்புதூர் அருகே கார் ஓட்டுனருக்கும், பைக்கில் வந்தவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு ஏற்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், மொளச்சூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் விஷ்ணு (24), ஏழுமலை (30). இருவரும் அதே பகுதியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் செய்யும் தொழில் செய்து வந்தார்.
இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சுங்குவார்சத்திரம் பஜாருக்கு கோழி இறைச்சி வாங்க பைக்கில் இருவரும் சென்றுள்ளனர். அப்போது விஷ்ணு ஓட்டிச் சென்ற பைக்குக்கு முன்பாக சென்ற கார் ஒன்று இன்டிகேட்டர் எதுவும் போடாமல் திடீரென வளைவில் திரும்பி உள்ளது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த விஷ்ணு கார் மீது மோதினார். இதன் காரணமாக விஷ்ணுவுக்கும், காரை ஓட்டி வந்த திருவள்ளூர் மாவட்டம், பண்ணூரை சேர்த்த பாங்கிராஜ் (62) ஆகிய இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் சிலர் விஷ்ணுவையும் காரை ஓட்டி வந்த பாங்கிராஜையும் சமாதானம் செய்து அனுப்பினர். பின்னர் அங்கிருந்து விஷ்ணு இருசக்கர வாகனத்தில் புறப்பட்டார். சிறிது தூரம் சென்ற நிலையில் பாங்கிராஜ் காரை அதிவேகத்தில் ஓட்டிச் சென்று விஷ்ணு சென்ற பைக்கின் பக்கவாட்டு பகுதியில் இடித்து விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிச் சென்றார். இந்த விபத்தில் விஷ்ணு, ஏழுமலை ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.
இதையடுத்து அங்கிருந்த மக்கள் சிலர் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்து படுகாயமடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்கு ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட விஷ்ணு சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். ஏழுமலைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து தகவல் அறிந்து வந்த விஷ்ணுவின் மனைவி பிரேமா மற்றும் உறவினர்கள் கார் ஓட்டுனர் மீது கொலை வழக்கு பதிவு செய்யக் கோரி சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போலீசாரிடம் வாக்குவாதம் செய்ததால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. சுங்குவார்சத்திரம் போலீசார் காரை இயக்கி சென்று விபத்தை ஏற்படுத்திய பாங்கிரஜை கைது செய்ததோடு காரையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இளைஞர்களிடம் வாக்குவாதம் செய்து இருசக்கர வாகனத்தை அணைத்துக்கொண்டே சென்று, காரின் பக்கவாட்டு பகுதியில் முட்டி தள்ளி இளைஞர்கள் இருவரும் தூக்கி வீசப்படும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.