'மாவட்டம்தோறும் 8 கி.மீ. நடை பயிற்சி பாதை' - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தமிழகத்தில் உள்ள 36 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு உடல் உறுப்பு தானம் பெறும் உரிமம் வழங்கப்பட்டுள்ளது
அமைச்சர்  மா.சுப்பிரமணியன் தகவல்
அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் 8 கி.மீ. நடை பாதைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. காலையில் நடை பயிற்சி மேற்கொள்பவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தர்மபுரி மாவட்டம் அரூர் அரசு மருத்துவமனையில் 2 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய சி.டி. ஸ்கேன் மற்றும் எலும்பு முறிவு சிகிச்சை அளிப்பதற்கான மேசை உள்ளிட்ட வசதிகளை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

மேலும், சுகாதாரத்துறை மூலம் மாரண்டஹள்ளி, தீர்த்தமலை, கடத்தூர் ஆகிய இடங்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அமைச்சர் திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், நடப்போம் நலம் பெறுவோம் எனும் திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் 8 கிலோ மீட்டர் நடை பாதைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

காலையில் நடை பயிற்சி மேற்கொள்பவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இரு புறங்களும் மரங்கள் நடப்பட்டு இச்சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் தமிழக முதல்வர் இது சாலைகளை திறந்து வைப்பார்.

இந்த நடைபாதைக்கு பயன்படும் சாலைகளில் சுகாதாரத் துறையினர் சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகளை மேற்கொள்ளும் வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளது.

ஜப்பானின் டோக்கியோ நகரில் 8 கிலோ மீட்டர் தொலைவிற்கு நடைபாதை அமைக்கப்பட்டு அதில் தினம்தோறும் பொதுமக்கள் நடை பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதை முன்மாதிரியாக கொண்டு தமிழகத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள் மற்றும் தமிழ்நாடு மாநிலத்திலோ அல்லது தமிழ்நாட்டிற்கு வெளியிலோ இன்டர்ன்ஷிப் காலம் உட்பட எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் முடித்தவர்கள் அரசு மற்றும் சுயநிதி நிறுவனங்களில் இருப்பிட சான்றிதழ்களுடன் முதுகலை படிப்பு ஒதுக்கீட்டிற்கு விண்ணப்பிக்க தகுதி உள்ளவர்கள்.‌ இதற்கு மாறாக வந்த செய்திகள் தவறானவை.

மேலும், பிற மாநிலங்களை பூர்வீகமாகக் கொண்டவர்கள் தமிழகத்தில் இன்டர்ன்ஷிப் காலம் உட்பட எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் முடித்தவர்கள் அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகளில் உள்ள திறந்தவெளி அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு மட்டுமே தகுதியானவர்கள். இந்தியாவிலேயே முதல்முறையாக உடல் உறுப்பு மாற்று ஆணையம் தமிழகத்தில் தான் உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 36 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு உடல் உறுப்பு தானம் பெறும் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும் இதில் அடங்கும்.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தற்போது உடல் உறுப்பு தானம் பெறுவதில் அதிகளவு முனைப்பு காட்டப்பட்டு வருகிறது. மேலும், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இருதய மாற்று அறுவை சிகிச்சை, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை, கணைய மாற்று அறுவை சிகிச்சை, எலும்பு மாற்று அறுவை சிகிச்சை, எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை, கருவிழி மாற்று அறுவை சிகிச்சை, தோல் மாற்று அறுவை சிகிச்சை என்று பல வகைகளில் இந்த மாற்று அறுவை சிகிச்சைக்கு சுமார் 40 லட்சம் ரூபாய் வரை முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்தியாவிலேயே தமிழகம் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மற்றும் அதற்கான மருத்துவ காப்பீடு திட்டத்தில் முதலிடத்தில் உள்ளது.

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் உள்ள மொத்தம் 20 ஆயிரம் மருத்துவப் பணியிடங்களில் 1,021 பணியிடங்கள் மட்டுமே தற்போது காலியாக உள்ளது. ஒரு மாதத்திற்குள் காலியாக உள்ள மருத்துவ பணியிடங்கள் நிரப்புவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

தமிழ்நாட்டில் இதுவரை மருத்துவம் படிப்பதற்கு 39,924 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். ஆனால், இதுவரை 32,649 மாணவர்கள் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். மேலும், மாணவர்கள் ஒரு சான்றிதழ் வாங்க கால தாமதம் ஏற்படுவதால், விண்ணப்பிக்க 2 நாள் கால அவகாசம் கேட்டிருந்தனர்.

இதனால், விண்ணப்பிக்க ஜூலை 10-ம் தேதி என்பது, 2 நாள் கூடுதலாக்கி ஜூலை 12-ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து மத்திய அரசும், மாநில அரசும் ஒரே தேதியில் கலந்தாய்வு நடத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அந்த தேதி அறிவிக்க இன்னும் 10 நாட்கள் ஆகலாம். ஆனால் அதுவரை காத்திருக்காமல், வருகிற 16-ம் தேதி காலை 10 மணிக்கு எம்பிபிஎஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்பிற்கான மெரிட் பட்டியல் வெளிப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

- பொய்கை.கோ.கிருஷ்ணா

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com