சிட்டிக்குள் சீட்டாட்டம்; புறநகரில் சேவலாட்டம் - கோவையை சுற்றிச் சுற்றி கவ்வும் சூது

சிட்டிக்குள் சீட்டாட்டம்; புறநகரில் சேவலாட்டம் - கோவையை சுற்றிச் சுற்றி கவ்வும் சூது
சிட்டிக்குள் சீட்டாட்டம்; புறநகரில்  சேவலாட்டம் - கோவையை சுற்றிச் சுற்றி கவ்வும் சூது

வாரா வாரம் வெகு சிறப்பாய் கவனித்து விடுகிறார்களாம் சூதாட்டத்தை ஒருங்கிணைப்போர்.

தமிழகத்தில் குற்றச்சம்பவங்கள் குறைவான மாவட்டங்களில் கோயமுத்தூருக்கு முன்வரிசையில் முதலிடம் உண்டு. ஆனால், யார் கண் பட்டதோ, சமீபகாலமாகவே கோவையின் பெயர் கோக்குமாக்காக கெட்டுப் போய் கிடக்கிறது. தொடர் கொலைகள், அனல் பறக்கும் கஞ்சா விற்பனை என்று ஏகப்பட்ட சர்ச்சைகளில் இந்த மாவட்டத்தின் பெயர் அடிபட்டுட்டு இருக்குது. 
அந்த வகையில் லேட்டஸ்ட்டாக அனுமதியில்லாத சீட்டாட்டக் கிளப் மற்றும் சேவல் சண்டை சூதாட்டங்களும் சிட்டியிலும், புறநகரிலும் பெருகி நிற்பதாக புகார்கள் குவிந்து வருகின்றன. கோவை சிட்டி இந்தியாவின் மிக முக்கியமான தொழில் நகரம் என்பதா சர்வதேச நபர்களின் வந்து- போவதுண்டு நிறையவே உண்டு. அப்படி வரும் நபர்களின் நன்மைக்காக என்று சொல்லி கோவையின் பல உயர்ரக ஹோட்டல்களில் ’கார்ட்ஸ்’எனப்படும் சீட்டாட்ட அரங்க வசதிகள் உள்ளன. ஆனால், வெளியே தெரியாமல் இவற்றில் பண சூதாட்டங்கள்தான் பெரும்பாலும் நடக்கின்றன. ஆனால்,  இது வெளியே தெரிவதில்லை.
இந்நிலையில் ‘வெளிநாட்டு பணக்காரன் இங்கே வந்து ஜாலியா சூதாடும் போது நம்ம மண்ணின் மைந்தர்கள் ஆடக்கூடாதா? என்னாங்கண்ணா இது பாரபட்சம்?’என்று கொந்தளித்த சமத்துவ மனிதர்கள் சிலர், சிட்டியின் பல பகுதிகளில் காதும் காதும் வைத்தாற்போல சீட்டாட்ட கிளப்களை திறந்துள்ளனர். ‘மனமகிழ் மன்றம்’எனும் பெயரில் போலீஸ் அனுமதியுடன் செயல்படும் கேரம்போர்டு, செஸ் கிளப்களிலும் சைலண்டாக சீட்டாட்டம் நடக்கிறதாம் அதுவும் பணத்துக்கு.
அவரவர் லெவலுக்கு ஏற்ப  ஐநூறு ஆயிரங்களில் துவங்கி லட்சம் வரையில் பணம் கட்டப்பட்டு இந்த சீட்டாட்டங்கள் நடக்கின்றனவாம். சிட்டிக்குள் சீட்டாட்டம் களைகட்ட, புறநகர் பகுதிகளான தொண்டாமுத்தூர், தேவராயபுரம், நரசீபுரம், ஆலாந்துறை போன்ற இடங்களிலோ ‘சேவக்கட்டு’ எனப்படும் சேவல் சண்டை சூதாட்டம் பட்டையை கிளப்புகிறதாம். அதுவும் சாதாரண தொகைக்கு அல்ல, ’கறுப்பு சேவல் ஜெயிக்குது. இல்ல, செவப்புதான் ஜெயிக்குது’என்று பெட்கட்டும் ஆரம்ப தொகையே ஐம்பதாயிரம். லட்சத்தில் துவங்கி  தினம் தினம் பல லட்சங்களுக்கு நடக்கிறதாம்.
மலையோர தோட்டங்கள்தான் இப்படியான சேவல்கட்டு சூதாட்டங்களின் ஆட்ட களமாக மாறியுள்ளன. லோக்கல் ஸ்டேஷன்களுக்கு இந்த ஆட்டங்கள் பற்றிய விபரங்கள் அத்துப்படி. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவது இல்லையாம். காரணம் சிட்டிக்குள் சீட்டுக்கச்சேரியையும், புறநகரில் சேவல்கச்சேரியையும் ஒருங்கிணைத்து நடத்துவதில் ஆளுங்கட்சி பிரமுகர்கள் சிலரின் கைகள்தான் பெரிதாய் இருக்கிறது. அதனால் ஏன் வம்பு? என்று  நிற்கும் போலீஸை வாரா வாரம் வெகு சிறப்பாய் கவனித்து விடுகிறார்களாம் சூதாட்டத்தை ஒருங்கிணைப்போர். 
ஆனால் பிறகு பிரச்னை என வந்துட கூடாது என்று சொல்லி வெறும் கண் துடைப்புக்கு தம்மாதுண்டு பணத்துக்கு  சூதாட்டம் நடத்தியதாக கேஸ் போட்டு வைத்துக் கொள்கின்றனராம். ’கோவை புறநகர் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்கள், டி.எஸ்.பி.க்கள், அத்தனை பேரின் ஓராண்டு சொத்துக் கணக்கு, பேங்க் பேலன்ஸை எடுத்துப் பார்த்தாலே புரிந்து போகும் எந்தெந்த ஏரியாவை சூது கவ்வியிருக்குது! என்று’ என்கிறார்கள் சமூக நல செயற்பாட்டாளர்கள். 
சூது கவ்வுமா என்ன?
-எஸ்.ஷக்தி

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com