'சிறுவாணிக்கு குறுக்கே 3 தடுப்பணைகள்' - தமிழக அரசிடம் கேள்வியெழுப்பும் சீமான்

'சிறுவாணிக்கு குறுக்கே 3 தடுப்பணைகள்' - தமிழக அரசிடம் கேள்வியெழுப்பும் சீமான்
'சிறுவாணிக்கு குறுக்கே 3 தடுப்பணைகள்' - தமிழக அரசிடம் கேள்வியெழுப்பும் சீமான்

சிறுவாணி ஆற்றின் கொள்ளளவை 50 கன அடியிலிருந்து 45 கன அடியாக ஏற்கனவே கேரள அரசு குறைத்துவிட்டது

'சிறுவாணி ஆற்றின் குறுக்கே 3 தடுப்பணைகளைக் கட்டும் கேரள அரசின் அத்துமீறலை தமிழ்நாடு அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டும்' என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'உலகின் மிகச் சுவையான நன்னீர் ஆறுகளில் ஒன்று சிறுவாணி ஆறு. இந்த ஆறு, கோவை மாவட்டத்தின் குடிநீர் தேவையை நிறைவேற்றுவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆனால், அதனைக் கெடுக்கும் வகையில் கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசு சிறுவாணி ஆற்றின் குறுக்கே கூலிக்கடவு – சித்தூர் சாலையில் தற்போது புதிய தடுப்பணையைக் கட்டி முடித்துள்ளது. மேலும் 2 இடங்களில் தடுப்பணைகளைக் கட்ட தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. 

இதனால், சிறுவாணி ஆற்றுநீர் உரிமை முற்று முழுதாகக் கானல் நீராகி, கோவையில் மிகப்பெரிய குடிநீர் பஞ்சம் ஏற்படும் பேராபத்து ஏற்படும். இரு மாநிலங்களுக்கும் இடையே உள்ள நதியின் குறுக்கே, எந்த ஒரு மாநிலமும் மற்றொரு மாநிலத்தின் ஒப்புதல் இன்றி தன்னிச்சையாக எந்தவித அணையும் கட்ட முடியாது என்பதை உச்ச நீதிமன்றம் பலமுறை தனது தீர்ப்புகளில் குறிப்பிட்டுள்ளது.

அதுமட்டுமின்றி சிறுவாணி ஆறானது காவிரி மேலாண்மை ஆணையத்தின் கீழ் வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் ஒப்புதலின்றி கேரள மாநில கம்யூனிஸ்ட் அரசு முறைகேடாக தடுப்பணைகளைக் கட்டி வருவது நதிநீர் சட்ட விதிமீறலாகும்.

தற்போது, கேரள அரசு சிறுவாணி ஆற்றின் குறுக்கே கட்டி உள்ள தடுப்பணையின் 90 சதவீதம் பணிகள் நிறைவடைந்துவிட்டது. அதுமட்டுமின்றி, சிறுவாணி ஆற்றின் கொள்ளளவை 50 கன அடியிலிருந்து 45 கன அடியாக ஏற்கனவே கேரள அரசு குறைத்துவிட்டது. கோடைக் காலத்தில் நீர் எடுக்கும் சிறுவாணி ஆற்றின் சுரங்கப்பாதையையும் சிறிதும் மனிதத்தன்மையின்றி மூடிவிட்டது.

ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தின் நதிநீர் உரிமைகளை ஒவ்வொன்றாய் தாரைவார்ப்பதற்கு பெயர்தான் திராவிட மாடலா? தமிழ்நாட்டின் உரிமையைப் பறிக்கும் கேரள மாநில அரசின் அத்துமீறலை இதுவரை தி.மு.க அரசு கண்டிக்காதது ஏன்? இதுதொடர்பாக கேரள அரசு மீது சட்ட நடவடிக்கை எடுக்காதது ஏன்?

எனவே சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி கோவையை பாலைவனமாக்கும் கேரள அரசின் எதேச்சதிகாரப் போக்கிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சட்டப் போராட்டம் நடத்தி, தமிழர்களின் நதி நீர் உரிமையைப் பாதுகாக்க வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com