கிரிப்டோ கரன்ஸியில் ரூ.2000 கோடி மோசடி - கிருஷ்ணகிரியில் சிக்கிய முக்கிய குற்றவாளி

கிரிப்டோ கரன்ஸியில் ரூ.2000 கோடி மோசடி - கிருஷ்ணகிரியில் சிக்கிய முக்கிய குற்றவாளி
கிரிப்டோ கரன்ஸியில் ரூ.2000 கோடி மோசடி - கிருஷ்ணகிரியில் சிக்கிய முக்கிய குற்றவாளி

முன்னாள் ராணுவ வீரர்கள் புகார் அடிப்படையில் மட்டும் ஆயிரம் கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது.

தமிழகம் முழுவதும் கிரிப்டோ கரன்சி மூலம் பணம் இரட்டிப்பு செய்து தருவதாகக் கூறி ரூ.2000 கோடி மோசடி செய்த முக்கிய குற்றவாளி கிருஷ்ணகிரி அருகே காரில் தப்பி சென்றவரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். 
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஓசூரில் ஏ.கே டிரேடர்ஸ் என்கிற பெயரில் நிறுவனம் தொடங்கியுள்ளார். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் பணம் இரட்டிப்பு செய்து வழங்கப்படும். அதிக லாபம் பெறலாம் என ஆசை வார்த்தைகளை கூறி முதலீடுகளைப் பெற்றுள்ளார். குறிப்பாக கிரிப்டோ கரன்சி முறையில் ஏழு லட்ச ரூபாய் ஒருவர் முதலீடு செய்தால், அவருக்கு அவரது செல்போனில் பத்தாயிரம் கோல்ட் காயின்கள் பாயிண்ட்கள் பதிவேற்றம் செய்து தரப்படுகிறது. அந்த பாயிண்டுக்கு ஏற்றவாறு வாரம் தோறும் 93 ஆயிரம் என 20 வாரங்களுக்கு வழங்கப்படும் என தெரிவித்து முதலீடு பெறப்பட்டுள்ளது.
அருண்குமார் தனக்கு உதவியாக பல்வேறு முகவர்களை நியமித்துள்ளார். அவர்கள் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முன்னாள், இந்நாள் ராணுவ வீரர்கள் குடும்பங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் திருவண்ணாமலை, வேலூர், தர்மபுரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலுள்ள சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அருண்குமார் மற்றும் அவரது முகவர்களின் ஆசை வார்த்தைகளை நம்பி முதலீடு செய்துள்ளனர். முதலீடு செய்த நபர்களுக்கு அந்நிறுவனம் தெரிவித்தவாறு சில வாரங்களாக பணம் வழங்கி வந்துள்ளனர். 
பின்னர்  பணம் வழங்குவதை நிறுத்தியுள்ளனர். இதனால், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர். பாதிக்கப்பட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற முன்னாள் ராணுவ வீரர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளித்தனர். அதன் அடிப்படையில் அருண்குமார், அவர் நியமித்த முகவர்கள் ஐந்து பேர் உட்பட ஆறு பேர் மீது கிருஷ்ணகிரி மாவட்டப் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். முதல் குற்றவாளியான அருண்குமார் தலைமறைவாகி இருந்தார். மீதமுள்ள ஐந்து குற்றவாளிகளை போலீசார் கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அருண்குமார் முதலீடுகளைப் பெற்றுக் கொண்டு ஏமாற்றி விட்டதாக தெரிவித்தனர். 
இந்த நிலையில் போலீஸாரால் தேடப்பட்டு வரும் அருண்குமார், இன்று கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே தனது குடும்பத்துடன் நிலம் ஒன்று வாங்குவதற்காக வந்துள்ளதாக போலீசாருக்கும், முதலீடு செய்த முன்னாள் ராணுவ வீரர்களுக்கும் தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் அடிப்படையில் அவர்களைப் பிடிக்க கிருஷ்ணரிலிருந்து போலீஸார் விரைந்து சென்றனர். ஆனால், இந்தத் தகவலை அறிந்து கொண்ட அருண்குமார், தனது சொகுசு காரில் தப்பிச் சென்றுள்ளார். 
இதனை அறிந்த போலீஸார் ஓசூர் அருகே பாகலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அவ்வழியாகச் சென்ற அருண்குமாரின் காரை மடக்கி பிடித்து போலீஸார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 16 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம், 12 பவுன் தங்க நகைகள் மற்றும் சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பின்னர் விரைந்து சென்ற கிருஷ்ணகிரி பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் அருண்குமாரை கைது செய்து கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி அருண்குமார் கைது செய்யப்பட்டு இருப்பதால் அவர் கிரிப்டோ கரன்சி மூலம் ஏ.கே ட்ரேடர்ஸ் என்ற பெயரில் எங்கெல்லாம் முதலீடு பெற்றுள்ளார். எத்தனை நபர்கள் இவரிடம் முதலீடு செய்துள்ளனர் என்பது குறித்து தெரியவரும். இவரது நிதி நிறுவனத்தில் மட்டும் இதுவரை 2000 கோடி ரூபாய் அளவில் முதலீடு பெறப்பட்டுள்ளதாகவும், முன்னாள் ராணுவ வீரர்கள் புகார் அடிப்படையில் மட்டும் ஆயிரம் கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் அடுத்த கட்டமாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com