திருவள்ளூர் மாவட்டம், பென்னலூர் பேட்டை, திடீர் நகர் பகுதியைச் சேர்ந்த பழங்குடியின மக்களின் குழந்தைகள் அரசு பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக அரசு பள்ளி தலைமை ஆசிரியர், பென்னலூர் பேட்டை பயிற்சி உதவி காவல் ஆய்வாளர் பரமசிவனிடம் முறையிட்டுள்ளார். மாணவிகளின் வீட்டிற்கு நேரில் சென்ற பயிற்சி உதவி காவல் ஆய்வாளர் அப்பகுதி மக்களிடம், “குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புங்கள். அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை குழந்தைகளுக்கு செய்து வருகிறது. காலை உணவு, மதிய உணவு என அனைத்தும் பள்ளியிலேயே வழங்கப்படுகிறது. தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில் ஏதேனும் சிரமம் இருந்தால் நேரடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு வந்து என்னைத் தொடர்பு கொண்டால் குழந்தைகளின் படிப்பிற்காக எந்த உதவி வேண்டுமானாலும், யார் காலில் விழுந்தாவது செய்து தருகிறேன்’’ எனப் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இதனைத் தொடர்ந்து சம்பவம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில் உதவி ஆய்வாளருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தார்.