நெல்லை: நள்ளிரவில் விபரீத சாகசம் - மதுபோதையில் நண்பர்களுக்கு நேர்ந்த துயரம்

நெல்லை: நள்ளிரவில் விபரீத சாகசம் - மதுபோதையில் நண்பர்களுக்கு நேர்ந்த துயரம்
நெல்லை: நள்ளிரவில்  விபரீத சாகசம் - மதுபோதையில் நண்பர்களுக்கு நேர்ந்த  துயரம்

திடீரென சாலையின் ஓரம் இருந்த மின்கம்பத்தின் மீது சர்க்கார் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் பயங்கர வேகத்தில் மோதியது.

மது போதையில் விவசாயி உட்பட இரு நண்பர்கள் அதி வேகமாக இருசக்கரத்தில் சென்றபோது மின்கம்பத்தில் மோதி விபத்தில் சிக்கியது அவர்களது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 
நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை, கோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர்களான கணேசன்- சர்கார் ஆகிய இருவரும் நண்பர்கள். சர்க்கார் பழைய கார்களை விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். கணேசன் விவசாயம் பார்த்து வந்தார். இவர்கள் இருவரும் நேற்று நள்ளிரவு இருசக்கர வாகனத்தில் கோட்டூர் பகுதியில் சென்று கொண்டிருந்தனர்.
சர்க்கார் வாகனத்தை ஓட்டி சென்றார். அப்போது திடீரென சாலையின் ஓரம் இருந்த மின்கம்பத்தின் மீது இருசக்கர வாகனம் பயங்கர வேகத்தில் மோதியது. இதில், சர்க்கார் மற்றும் கணேசன் இருவரும் அருகில் இருந்த முள் புதருக்குள் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நள்ளிரவு உயிரிழந்த நண்பர்களை காலையில் நடை பயிற்சி செல்லும் போது பொதுமக்கள் பார்த்து தகவல் அளித்துள்ளனர். 
அதன் அடிப்படையில், நெல்லை மாநகரப் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். உயிரிழந்த கணேசன், சர்க்கார் ஆகியோரின் உடல்களை மீட்டுப் பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மாநகர போக்குவரத்துப் புலனாய் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். முதல் கட்ட விசாரணையில் இருவரும் அளவுக்கு அதிகமாக மது அருந்தி சென்றதும், மது போதையில் மின்னல் வேகத்தில் வாகனத்தை ஒட்டிச் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து வாகனம் மின் கம்பத்தில் மோதியதும் தெரிய வந்தது. இதுகுறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com