ஓ.பன்னீர்செல்வம் போல் எடப்பாடி பழனிசாமி போலி கும்பிடு போட்டு நடிக்கமாட்டார்
ஓ.பி.எஸ். அ.தி.மு.க. கட்சி கொடி, சின்னத்தை பயன்படுத்துவது நியாயத்திற்கு புறம்பானது என்றும், 'ஓ.பன்னீர்செல்வம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிலைப்பாடு எடுத்து வருகிறார். அவரிடம் ஒரே நிலைப்பாடு இல்லை' என்றும் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் காமராஜ் குற்றம் சாட்டினார்.
தஞ்சாவூரில் அ.தி.மு.க. கட்சி சார்பில் முன்னாள் அமைச்சர் காமராஜ் தலைமையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் காமராஜ் பேசும்போது, 'தி.மு.க. ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் மட்டுமே ஆகிறது. ஆனால், தி.மு.க. ஆட்சி எப்போது முடியும் என்று மக்கள் கேட்கின்றனர். அந்த அளவு ஒவ்வொரு நாளும் கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர். எனவே, அ.தி.மு.க. ஆட்சியை மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
தி.மு.க-வை எதிர்த்துதான் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க-வை தொடங்கினார். வாழ்நாள் முழுவதும் தி.மு.க. எதிர்க்கவேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக உள்ளார். ஆனால், ஓ.பன்னீர்செல்வம் போல் போலி கும்பிடு போட்டு கொண்டு நடிக்கமாட்டார். உறுதியான தலைவராக எடப்பாடி பழனிசாமி உள்ளதால் தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் அவரை மனதார ஏற்றுக்கொண்டுள்ளனர்' என்றார்.
பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், 'மாற்றுக்கட்சியில் இருந்து அ.தி.மு.க-வில் நிறையபேர் விரும்பி இணைய உள்ளனர். அவர்களை எல்லாம் இணைப்பதற்காக வரும் மே மாதம் 4ம் தேதி ஒரத்தநாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. அ.தி.மு.க-வுக்கு ஒரே பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே. அதை தேர்தல் ஆணையமும் அங்கீகரித்துள்ளது. நீதிமன்றமும் அங்கீகரித்துள்ளது.
அ.தி.மு.க. கட்சி கொடியையும், சின்னத்தையும் பயன்படுத்துவோம் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவிப்பது, நியாயத்திற்கும், தர்மத்திற்கும் புறம்பானது. அ.தி.மு.க. கட்சியின் சின்னத்தையும் கொடியையும் வேறு யாரும் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம். ஓ.பன்னீர்செல்வம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிலைப்பாடு எடுத்து வருகிறார். அவரிடம் ஒரே நிலைப்பாடு இல்லை. எனவே, தொண்டர்கள் யாரும் அவரை நம்பி செல்ல தயாராக இல்லை என்றார்.