வேதாரண்யம்: குளத்தில் பதுங்கிய முதலைக்கு வலை- காத்திருக்கும் வனத்துறை

வேதாரண்யம்: குளத்தில் பதுங்கிய முதலைக்கு வலை- காத்திருக்கும் வனத்துறை
வேதாரண்யம்: குளத்தில் பதுங்கிய முதலைக்கு வலை-  காத்திருக்கும் வனத்துறை

முதலை அந்த குழிக்குள் விழுந்து மாட்டிக்கொள்ளும். எப்படியும் விரைவில் முதலையைப் பிடித்துவிடுவோம்

வேதாரண்யம் அருகே குளத்தில் பதுங்கிய முதலையால் பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதனைத் தொடர்ந்து வனத்துறையினர் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே வேம்பதேவன்காடு பகுதியில் சுமார் 5 ஏக்கரில் புதுக்குளம் அமைந்துள்ளது. இந்தக் குளம் பொதுமக்கள் குளிப்பதற்கும், ஆடு, மாடுகள் நீர் அருந்துவதற்கும் பயன்பட்டுவருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த குளத்தில் குளித்துக் கொண்டிருப்பவர்களின் கண்ணில் மிகப்பெரிய அளவிலான முதலை ஒன்று தென் பட்டிருக்கிறது. உடனே அலறியடித்துக் கரை ஏறியவர்கள் ஊர் பொதுமக்களிடம் கூறியிருக்கின்றனர். அதிலிருந்து மக்கள் யாரும் இந்தப் புதுக்குளத்தில் குளிக்கப் பயந்து வந்தனர். இது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு மக்கள்  புகார் தெரிவித்ததன் பேரில் உடனே விரைந்து வந்து சிறு படகுகள் மூலம் குளத்தில் வலையை வீசி முதலையைப் பிடிக்க முயற்சிசெய்தனர். 
ஆனால், முதலையோ குளத்தின் ஆழமான பகுதிக்குச் சென்று பதுங்கிக் கொண்டது. பின்னர் தீயணைப்புத் துறையினரையும் வரவழைத்து முதலையைப் பிடிக்கும் முயற்சியும் தோல்வியில் முடிந்தது. இருப்பினும் வனத்துறை மற்றும் தீயணைப்புத்துறையினர் இணைந்து முதலையைத் தேடும் பணியில் ஈடுபட்டிருக்கின்றனர். எப்படியும் இன்று இரவுக்குள் அந்த  முதலையைப் பிடித்துவிடுவோம் என்றும் கூறியிருக்கின்றனர்.
இதுகுறித்து பொதுமக்களிடம் பேசினோம். “எப்படி இந்த குளத்திற்கு முதலை வந்தது எனத் தெரியவில்லை. குளிக்கும்போது முதலை கண்ணில் பட்டதால் மக்கள் அனைவரும் உஷாராகிவிட்டோம். இல்லையெனில் உயிர்ப்பலி ஏற்பட்டிருக்கும். மக்கள் குளிப்பதற்கு இந்த குளத்தைத்தான் அதிகம் பயன்படுத்துவார்கள். இனி முதலை பிடிபடும் வரை இந்த குளத்தைப்  பயன்படுத்த முடியாது. அதே போல் கால்நடைகளையும் இந்த குளம் இருக்கும் பக்கம் அனுப்பாமல் பார்த்துக்கொள்ளும்படி அனைவரையும் எச்சரிக்கை செய்திருக்கிறோம். முதலை பிடிபடும் வரை அச்சத்துடனே இருக்க வேண்டியுள்ளது” என்றனர்.
வேதாரண்யம் வனத்துறை ரேஞ்சர் அயூப்கானிடம் பேசினோம். “மானங்கொண்டான் ஆற்றிலிருந்து முதலை இந்தக் குளத்திற்கு வந்திருக்கலாம். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பே ஆற்றிலிருந்த வந்த இந்த முதலை பல குளங்கள் தாண்டி இப்போது புதுக்குளத்திற்கு வந்திருக்கிறது. நாங்களும் அதைப் பிடிக்க முயற்சி செய்துகொண்டுதான் இருக்கிறோம். இப்போது எங்கள் வலை மூலம் பிடிக்க முடியாததால்  ஈயக்குண்டுடன் உள்ள சலங்கை வலை மூலம் இன்று தேடுதல் வேட்டையைத் தொடங்கவிருக்கிறோம். அத்துடன் குளத்தின் கரையைச்சுற்றி பெரிய குழிகளை வெட்டி அதில் கோழியின் குடல்களைப் போட்டு வைக்கவிருக்கிறோம். குடலை சாப்பிட வரும் முதலை அந்த குழிக்குள் விழுந்து மாட்டிக்கொள்ளும். எப்படியும் விரைவில் முதலையைப் பிடித்துவிடுவோம்.” என்றார் நம்பிக்கையுடன்.
-ஆர்.விவேக் ஆனந்தன்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com