வருமான வரிச் சட்டத்தின் கீழ் ரூபாய் 20 ஆயிரத்துக்கு மேல் பணமாக கொடுப்பதும், வாங்குவதும் தண்டனைக்குரிய குற்றம் ஆகும்
ரூ.3 லட்சம் மதிப்புள்ள ரஃபேல் வாட்ச்சை ரொக்கப் பணம் கொடுத்து வாங்கிய, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தி.மு.க. எம்.பி கலாநிதி வீராசாமி கடிதம் எழுதியுள்ளார்.
ரஃபேல் வாட்ச் ரஃபேல் விமானத்தின் உதிரி பாகங்களால் செய்யப்பட்டவை என்றும், தான் ஒரு தேசியவாதி என்பதால் அந்த வாட்ச்சை வாங்கியதாகவும் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறினார்.
ரஃபேல் நிறுவனம் தயாரித்த 500 வாட்ச்சுகளில் தான் வைத்திருப்பது 149 ஆவது பதிப்பு என்றும் கூறினார். 4 ஆட்டுக் குட்டிகளை மட்டுமே வைத்திருந்ததாக சொல்லும் அண்ணாமலைக்கு 5 லட்ச ரூபாய் மதிப்பிலான வாட்ச் வாங்கும் அளவுக்குப் பணம் ஏது? எனத் தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பினார்.
இதனைத்தொடர்ந்து, அமைச்சர் செந்தில் பாலாஜியின் கேள்விக்கு பதிலளிக்கும் வகையில், ஏப்ரல் 1ம் தேதி ரஃபேல் வாட்ச் பில்லை வெளியிடுவதாக அறிவித்தார். ஆனால், 13ம் தேதி வரை வெளியிடவில்லை. இந்த நிலையில், கடந்த 14ம் தேதி சென்னையில் உள்ள பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் ரஃபேல் வாட்சுக்கான பில்லை வெளியிட்டார்.
அப்போது பேசிய அவர், "இந்த ரபேல் வாட்ச்சை இந்தியாவில் 2 பேர் தான் வாங்கியுள்ளனர். அதில் ஒருவர் மும்பையில் இருக்கிறார். இதன் 2வது வாட்ச் கோயம்பத்தூரில் உள்ள Zimson Time Private Limited-ல் விற்கப்பட்டுள்ளது. இந்த வாட்சை மார்ச் மாதம் 2021-ல் கோவையைச் சேர்ந்த சேரலாதன் ராமகிருஷ்ணன் 4 லட்சம் ரூபாய்க்கு வாங்கினார். 2021-ம் ஆண்டு மே 27ம் தேதி, நான் அவரிடம் இருந்து 3 லட்சத்திற்கு வாங்கினேன்" என்று கூறினார்.
இந்த நிலையில் வடசென்னை தி.மு.க எம்.பி கலாநிதி வீராசாமி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், "தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் குடும்பச் செலவு, வீட்டு வாடகை மற்றும் அவர்களது உதவியாளர்களுக்கு மாதம் சம்பளம் ரூ.7 லட்சம் முதல் 8 லட்சம் வரை அவரது நண்பர்கள் கொடுப்பதாகத் தெரிவித்துள்ளார். கடந்த 2021ம் ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து ஏறத்தாழ ரூ. 1.76 கோடி பெற்றுள்ளார்.
1961 ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தின் கீழ் ரூபாய் 20 ஆயிரத்துக்கு மேல் பணமாக கொடுப்பதும், வாங்குவதும் தண்டனைக்குரிய குற்றம் ஆகும். எனவே, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மீது வருமான வரி சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.