நீலகிரி: ‘அரசியல் வன்மம்தான் அனைத்துக்கும் காரணம்’ – அமைச்சர் இளித்துறை ராமச்சந்திரன் ஆவேசம்

நீலகிரி: ‘அரசியல் வன்மம்தான் அனைத்துக்கும் காரணம்’ – அமைச்சர் இளித்துறை ராமச்சந்திரன் ஆவேசம்
நீலகிரி: ‘அரசியல் வன்மம்தான் அனைத்துக்கும் காரணம்’ – அமைச்சர் இளித்துறை ராமச்சந்திரன் ஆவேசம்

சென்னைக்கு பறந்து வருமளவுக்கு அவர்களுக்கு மனதில் அரசியல் வன்மம் இருக்குது.

தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் இளித்துறை ராமச்சந்திரனின் சொந்த தொகுதிக்குள் அடங்கும் பாதுகாக்கப்பட்ட வனத்தில் அவரது மருமகன் சிவக்குமார் அனுமதியின்றி ரோடு போட்ட விவகாரம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. 
கோத்தகிரியில் இருந்து கொடநாடு செல்லும் வழியில் உள்ளது ஈளாடா கிராமம். இங்கிருந்து வலது புறம் இறங்கிச்செல்லும் சாலையில் சென்றால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கர்சன் மற்றும் க்ரீன் டீ எஸ்டேட் பகுதிகள் வருகின்றன. இவை இருப்பதே அடர் வனத்தை உரசிய நிலையில்தான். அதையும் தாண்டி மிக மிக அடர்த்தியான வனத்தினுள் செல்லத் துவங்கினால் கடும் கரடுமுரடான அந்த பாதையெங்கும் யானை சாணங்கள் திகிலூட்டுகின்றன. காட்டு மாடுகள் குறுக்கு மறுக்காகத் தாவி ஓடுகின்றன. இதிலிருந்தே அந்தப் பகுதி எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாக்கப்பட்ட வனம் என்பது புலனாகிறது. இதனுள்தான் சிவக்குமாருக்கு சொந்தமான பல ஏக்கர் கொண்ட எஸ்டேட்டில் காட்டு மரங்களை அழித்து சாலை அமைக்கப்பட்டதாக சிக்கல் எழுந்துள்ளது. 
இது பற்றி பேசும் அதிமுகவினர் “காப்புக் காட்டில் ஒரு அடி, ரெண்டு அடி அல்ல. சுமார் ஒன்று புள்ளி ஆறு கிலோமீட்டர் தூரத்துக்கு அனுமதியே இல்லாமல் பொக்லைன் மற்றும் ரோடு ரோலரை கொண்டு சாலை அமைச்சிருக்காங்க. என்னதான் அமைச்சர் மருமகன் சிவக்குமாருக்கு அங்கே பட்டா நிலம் பல ஏக்கர் இருந்தாலுமே கூட, காப்புக் காட்டை நிரவி பாதை அமைக்கும் உரிமையை அவருக்கு யார் தந்தது? பதிவு எண்ணே பெறாத பொக்லைனை உள்ளே கொண்டு போயிருக்காங்கன்னு வனத்துறையினரே கொதிக்கிறாங்க. அமைச்சரின் குடும்ப உறுப்பினரே இப்படி காட்டை அழித்தால் தாங்குமா? முதல்வர் உடனடியாக தலையிட்டு இதில் முழுமையான விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்கணும். இல்லேண்ணா எடப்பாடியாரின் வழிகாட்டுதலை பெற்று மிக கடுமையான போராட்டத்தை அ.தி.மு.க. நிச்சயமாக முன்னெடுக்கும்.” என்று முடித்தார்.
நீலகிரி மாவட்ட வன அலுவலரான கவுதமிடம் பேசியபோது, “மேடநாடு காப்புக்காட்டில் ஒன்று புள்ளி ஆறு கிலோமீட்டர் அளவில் அனுமதி பெறாமல் சாலை அமைக்கப்பட்டு வருவதாக புகார் வந்தது. உடனடியாக எங்கள் துறையினர் அங்கே சென்று பணிகளைத் தடுத்து நிறுத்தினோம். அங்கே சாலையமைப்பு பணியிலிருந்த பாலகிருஷ்ணன், பரூக் மற்றும் பங்கஜ்குமார் எனும் மூன்று பேரை கைது செய்தோம். தமிழ்நாடு வனச்சட்டத்தின் படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிவக்குமாருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. பின் அவர் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார்.” என்றார்.
அமைச்சரின் மருமகன் சிவக்குமாருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால், அவர் வெளியூர் சென்றதால் அதற்கு பதில் வழங்கப்படாத நிலையில் அவரை குற்றவாளியாக சேர்த்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், சிவக்குமாரும் கைதாகலாம் எனும் பரபரப்பு எழுந்த நிலையில் அவர் உடனடியாக கோத்தகிரி ஜூடிஷியல் மாஜிஸ்திரேட்டிடம் ஜாமீன் வாங்கிவிட்டார். கைது நடவடிக்கையிலிருந்து சட்ட ரீதியில் அவர் தப்பினாலும் கூட சர்ச்சைகள் அவரையும், அவரது மாமனாரான அமைச்சர் ராமச்சந்திரனையும் சுற்றத்தான் செய்கின்றன.
அமைச்சர் ராமச்சந்திரனிடம் பேசியபோது “அந்த எஸ்டேட் நிலத்துக்கும், எனக்கும் எந்த சம்பந்தமுமில்லை. அது சிவக்குமாரின் தாத்தா வழி பூர்வீக சொத்து. இந்த பிரச்னை எழுந்த பிறகு, என்ன நடக்குது என்று அதைப்பற்றி விசாரித்தேன். அந்த நிலத்தை விற்பனை செய்து, அக்ரீமெண்ட் போட்டாச்சாம். இந்த நிலையில்தான் என்னுடைய அரசியல் எதிரிகள் முழுக்க முழுக்க என்னை பழிவாங்கும் நோக்கில் இப்படி ஒரு விஷயத்தை ஊதிப் பெரிதாக்கியுள்ளார்கள். புகாரை எடுத்துக்கிட்டு அதை லாபி செய்வதற்காக ஃப்ளைட் பிடிச்சு சென்னைக்கு பறந்து வருமளவுக்கு அவர்களுக்கு மனதில் அரசியல் வன்மம் இருக்குது. இது எல்லாவற்றையும் முதல்வரிடம் ஆதாரத்தோடு விளக்கிவிட்டேன்” என்கிறார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com