அ.தி.மு.கவுக்குச் சாதகமான 10 தொகுதிகள் பெயர் பட்டியலை கொடுத்தபோதும் பா.ஜ.க கண்டுகொள்ளவில்லை
கர்நாடகா மாநிலத்தில், ஓ.பன்னீர்செல்வத்தின் வேட்பாளருக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளதற்கு அ.தி.மு.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் 224 தொகுதிகள் உள்ளது. இங்கு மே 10ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு நடைபெற உள்ள தேர்தலில், பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் போட்டியிடுகின்றன. மேலும், தேர்தல் பிரசாரத்திலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
இதனிடையே, பா.ஜ.க. கூட்டணியில் அ.தி.மு.க போட்டியிட விரும்பியது. இது தொடர்பாக அ.தி.மு.க-வுக்கு சாதகமான 10 தொகுதிகள் பெயர் பட்டியல் பா.ஜ.க-விடம் கொடுக்கப்பட்டது. ஆனாலும், அ.தி.மு.க. கோரிக்கையை பா.ஜ.க. கண்டுகொள்ளவில்லை. மாறாக, பா.ஜ.க. தரப்பில் வேட்பாளர்கள் லிஸ்ட் அறிவிக்கப்பட்டது. இதனால், அ.தி.மு.க சார்பில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தனித்தனியாக வேட்பாளர்களைக் களமிறக்கியுள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி தரப்பில் புலிகேசி நகர் தொகுதியில் வேட்பாளர் நிறுத்தப்பட்டார். அவருக்குத் தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கி உள்ளது. இதேபோல், கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளர்கள் இருவரின் மனுக்கள் ஏற்கப்பட்டு உள்ளன.
இதில் அ.தி.மு.க. சார்பில் புலிகேசி நகர் தொகுதியில் போட்டியிட எடப்பாடி பழனிசாமியின் ஆதரவு வேட்பாளர் அன்பரசன் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை தேர்தல் ஆணயம் ஏற்றுக் கொண்டது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளர் நெடுஞ்செழியனின் மனு நிராகரிக்கப்பட்டது.
இதேபோல், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில், புலிகேசி நகர், கோலார் தங்கவயல் மற்றும் காந்திநகர் உள்ளிட்ட தொகுதிகளில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருந்தனர். காந்திநகர் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவுடன் மனுத் தாக்கல் செய்த குமாரின் மனு அ.தி.மு.க வேட்பாளராகவும், கோலார் தங்கவயல் தொகுதியில் ஆனந்தராஜ் மனு சுயேச்சை வேட்பாளராகவும் ஏற்கப்பட்டுள்ளது.
ஓ.பன்னீர்செல்வத்தின் வேட்பாளருக்கு அ.தி.மு.க வேட்பாளர் எனத் தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளதற்கு அ.தி.மு.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.