அ.தி.மு.க-விலிருந்து 11. 07. 2022 அன்று ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கிவிட்டோம்
'திருச்சியில் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் நடத்தும் மாநாட்டில் அ.தி.மு.க-வின் கொடி, பெயர், சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்கவேண்டும்' என திருச்சி காவல்துறையில் அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. குமார் உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் புகார்த் தெரிவித்துள்ளனர்.
'திருச்சியில் வரும் 24ம் தேதி, அதாவது நாளை மறுநாள் முப்பெரும் விழா மாநாடு நடைபெறும்' என ஓ.பி.எஸ். அணி சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்பேரில், திருச்சி, டி.வி.எஸ். டோல்கேட் அருகே உள்ள பொன்மலை ஜி.கார்னர் மைதானத்தில் முப்பெரும் விழா மாநாடு துவக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதற்கென பிரமாண்டமான மேடை மற்றும் பந்தல் அமைப்பதற்காக கடந்த 20ம் தேதி அதிகாலை பூஜையுடன் பந்தக்கால் நடும் விழா நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணி துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான கு.ப.கிருஷ்ணன், அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துக் கொண்டனர்.
இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளராக, தேர்தல் ஆணையம் அங்காரம் அளித்துள்ளது. இதனால், அ.தி.மு.க. கட்சிக் கொடி, சின்னம், தலைமைக் கழகம் உள்ளிட்டவை எடப்பாடி பழனிசாமி வசம் வந்தது.
இந்நிலையில் திருச்சி மாநாட்டில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு, அ.தி.மு.க. கொடி மற்றும் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்தக் கூடாது என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு எதிர்ப்புத் தெரிவித்து, திருச்சி மாநகரக் காவல்துறை ஆணையரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர், முன்னாள் எம்பி, குமாரிடம் கேட்டபோது, "அ.தி.மு.கவிலிருந்து 11. 07. 2022 அன்று ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கிவிட்டோம். எடப்பாடி பழனிச்சாமி தான் சட்டப்படி அ.தி.மு.க. என்று நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் அங்கீகாரம் அளித்துள்ளது.இருந்தும் கட்சி கொடியையும் சின்னத்தையும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தவறாக பயன்படுத்துகிறார்கள். அதேபோல், சமூக வலைத்தளங்களிலும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் என்று தவறாக பயன்படுத்துகிறார்கள். எனவே, இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று, திருச்சி மாநகரக் காவல்துறை ஆணையரிடம் புகார் மனு கொடுத்துள்ளோம்”என்றார்.
அ.தி.மு.க. எம்.பி. குமாரின் குற்றச்சாட்டு குறித்து, ஓ.பன்னீர்செல்வம் அணியின் மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி நடராஜனிடம் விளக்கம் கேட்டோம். 'அவர்கள் பொதுவெளியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேட்டி கொடுத்து இருந்தால் அதற்கு பதில் சொல்லலாம். ஆனால், அவர்கள் போலீஸ் கமிஷனரிடம் புகார்க் கொடுத்துள்ளனர்.
மாநகரக் காவல் துறை ஆணையர் எங்களை அழைத்து விசாரித்தால் எங்களுடைய பதிலை நாங்கள் சொல்லுவோம். நாங்கள் தான் உண்மையான அ.தி.மு.க. என்பதை நிரூபிக்கும் வகையில் செயல்படுவோம்" என்றார்.
- திருச்சி ஷானு உடன் கே.என்.வடிவேல்.