சி.பி.சி.ஐ.டி. போலீசார் இதுவரை 300க்கும் மேற்பட்டோரிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர்
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கோடநாட்டில் மர்மான முறையில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை வழக்கு குறித்து, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பாதுகாவலர் கனராஜ், 100-க்கும் மேற்பட்ட முறை பேசியுள்ளது குறித்து, சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவுக்கு சொந்தமானது ஊட்டி அருகே உள்ள கோடநாடு பங்களா. இந்த பங்களாவில் மர்மமான முறையில் கொலை, கொள்ளை, தற்கொலை, விபத்து உள்ளிட்டவை நடைபெற்றதாகப் புகார் எழுந்தது.
அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து, கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு சூடு பிடித்தது. இது தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி. போலீசார் இதுவரை 300க்கும் மேற்பட்டோரிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
அந்த வகையில், சம்பவம் நடந்த போது பணியில் இருந்த ஐ.பி.எஸ். அதிகாரிகளிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில், அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தனி பாதுகாப்பு அதிகாரியாக இருந்த கனகராஜ், ஓட்டுநரிடம் 100-க்கும் மேற்பட்ட முறை பேசியதாக கூறப்படுகிறது. இதனால், அவரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை மந்தைவெளியில் காவலர் குடியிருப்பில் உள்ள கனகராஜ் வீட்டிற்கு, இன்று காலை 6 மணிக்கு சென்ற கூடுதல் எஸ்.பி. முருகவேல் தலைமையிலான போலீசார், கனகராஜிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தனி பாதுகாப்பு அதிகாரியாக இருந்த கனகராஜ், தற்போது ஆவடி ஆயுதப்படையில் உதவி ஆணையராகப் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.