வன்னியர்களின் வீடுகளுக்கு சென்று முதலமைச்சருக்கு அனுப்ப வேண்டிய கடிதங்களை அன்புமணி வழங்கினார்
வன்னியர் உள் இட ஒதுக்கீடு விவகாரத்தில், மாமல்லபுரம் அடுத்துள்ள திருவிடந்தையில் தி.மு.க மற்றும் அ.தி.மு.க-வினரிடம் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆதரவு திரட்டி வருகிறார். மேலும், முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பும் இயக்கத்தையும் தொடங்கிவைத்தார்.
தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீதம் இடஒதுக்கீடு உள்ளது. இதில், வன்னியர்களுக்கு 10.50% உள் இட ஒதுக்கீடு கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் வழங்கப்பட்டது. இது தொடர்பாக, பரிந்துரை செய்வதற்கு, பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அளிக்கப்பட்ட காலக்கெடுவை மேலும் 6 மாதங்களுக்கு, தி.மு.க. தலைமையிலான அரசு நீட்டித்துள்ளது.
இது தொடர்பாக பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர்கள், கடந்த சில நாட்களுக்கு முன்னர், அதாவது 13ம் தேதி சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். அப்போது பேசிய பா.ம.க. சட்டமன்ற தலைவர் ஜி.கே.மணி, '10.5 இடஒதுக்கீடு குறித்து ஆய்வு செய்து 3 மாதத்திற்குள் அறிக்கை கொடுக்கவேண்டும் என ஆணையத்திற்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டது.
தற்போது 6 மாதங்களுக்கு கால நீட்டிப்புச் செய்யப்பட்டது ஏன்?' என்றும், 'வரும் கல்வியாண்டில் இடஒதுக்கீடு அமல்படுத்தவி்ல்லையென்றால் மருத்துவ படிப்பு மற்றும் அண்ணா பல்கலைகழகத் தேர்வுகளில் இட ஒதுக்கீடு பெறமுடியாமல் போய்விடும் என்றும், ஒரு மாதத்திற்குள் கொண்டு வரவேண்டும்' என்று வலியுறுத்தி பேசினார்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி, பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தனது குடும்பத்திருடன், சென்னை தி.நகரில் உள்ள தபால் நிலையத்தில் இருந்து முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பினார்.
இந்த நிலையில், முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பும் இயக்கத்தை மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தையில் இன்று தொடங்கி வைத்தார். அங்குள்ள தி.மு.க. மற்றும் அ.தி.மு.கவைச் சேர்ந்த வன்னியர்களின் வீடுகளுக்கு சென்று, முதலமைச்சருக்கு அனுப்ப வேண்டிய கடிதங்களை வழங்கினார்.
பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டாக்டர் அன்புமணி ராமதாஸ், 'வரும் மே 31ம் தேதிக்குள் இட ஒதுக்கீடு தரவில்லை என்றால் 1987ல் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் நடந்த சமூக நீதி போராட்டம் போன்று மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம்' என்றார்.