ஆருத்ரா நிறுவனம் மோசடியில் 96 கோடி ரூபாய், 93 அசையா சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளது
தமிழக சட்டப் பேரவையில், ஆருத்ரா நிறுவனம் மோசடி குறித்து, உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளித்த, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'நிதி நிறுவனங்களை கண்காணிக்க காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது' என தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைமீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில், தளி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ராமச்சந்திரன் பேசுகையில், 'நிதி நிறுவனம் மோசடியில் மக்கள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருவதாகவும், இதற்கு தமிழக அரசு சார்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?' என கேள்வி எழுப்பினார்.
இதற்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார், "கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில்தான் ஆரூத்ரா கோல்ட் டிரேடிங் பிரைவேட் லிமிடெட் என்ற நிதி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கவர்ச்சிகரமான அறிவிப்பு மூலம் சுமார் 1 லட்சம் முதலீட்டாளர்களுக்கு சுமார் 2,348 கோடி ரூபாய் முதலீடு மற்றும் வட்டியை திருப்பித் தராமல் ஏமாற்றி உள்ளனர்.
தி.மு.க. ஆட்சிக்கு பிறகுதான், புகாரின் மீது வழக்குப் பதிவு செய்து 22 பேர் எதிரிகளாக சேர்க்கப்பட்டு அதில், இயக்குநர்கள் மற்றும் ஏஜெண்ட் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றவர்களை கைது செய்ய ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுல்ல Look Out Circular வழங்கப்பட்டுள்ளது. அதன், 96 கோடி ரூபாய், 93 அசையா சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் விரைவில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது.
இதேபோல், மோசடி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், இது போன்ற நிதி நிறுவனங்களை கண்காணிக்கவும் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்' என தெரிவித்துள்ளார்.