இனிமேல் பிராதான எதிர்க்கட்சியாக அ.தி.மு.க. செயல்படும்
'அ.தி.மு.க. என்பது ஒன்றுதான் என்று தெளிவான விடை கிடைத்துள்ளது என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, 'அ.தி.மு.க. என்பது ஒன்றுதான் என்பதற்கான தெளிவு கிடைத்துள்ளது. மற்றவர்களைப் பற்றிப் பேசி நாங்கள் எங்கள் நேரத்தையும், காலத்தையும் வீணடிக்க விரும்பவில்லை.
எங்களை பொறுத்தவரை, அ.தி.மு.கவுக்கு ஒரு சிலரை தவிர யார் வந்தாலும் கட்சியில் சேர்த்துக் கொள்ளத் தயாராக உள்ளோம். நான் குறிப்பிடுவது, அந்த ஒரு சிலர் யார் என்று உங்களுக்கே தெரியும். அதற்குள் நான் உள்ளே செல்ல விரும்பவில்லை.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுகிடக்கிறது. எனவே, தமிழகம் மீண்டும் அமைதிப் பூங்காவாகத் திகழவேண்டும் என்றால் அ.தி.மு.க. ஆட்சிக்கு வரவேண்டும். அப்போதுதான் தமிழகம் முன்னேறும். எனவே, தி.மு.க. ஆட்சியை வீட்டிற்கு அனுப்புவதே எங்களது லட்சியம்.
தி.மு.கவை எதிர்க்க வலுவான கட்சி என்றால் அது அ.தி.மு.க. மட்டுமே. இனிமேல் பிரதான எதிர்க்கட்சியாக அ.தி.மு.க. செயல்படும். எப்போது தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. வெற்றி பெறும். அந்த அளவு வலிமையோடு உள்ளது.
சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரம் குறித்து மீண்டும் சபாநாயகரின் கவனத்திற்கு எடுத்துச் செல்வோம். தமிழகத்தைப் பொறுத்தவரை அ.தி.மு.க. - பா.ஜ.க கூட்டணி தொடர்கிறது. கர்நாடகா மாநிலத்தைப் பொறுத்தவரை எங்களை அடையாளப்படுத்தும் வகையில் ஒரு தொகுதியில் போட்டியிட உள்ளோம் என்றார்.