பொதுச்செயலாளர் பதவி: எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்த தேர்தல் ஆணையம்
அ.தி.மு.க. கட்சி மற்றும் இரட்டை இலை சின்னம் ஆகிய இரண்டும் எடப்பாடி பழனிசாமி வசமானது
அ.தி.மு.க. பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. மேலும், கடந்த ஜூலை மாதம் 11 ம் தேதி கூட்டப்பட்ட அ.தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கும் தேர்தல் ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.கவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதற்கு, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் அனைத்தும், எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாகவும், ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராகவும் அமைந்தது. இதனைத் தொடர்ந்து, கடந்த மாதம் அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார். இதனையும் எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க. பொதுச் செயலாளராக அங்கீகரிக்க கூடாது என தேர்தல் ஆணையத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கோரிக்கை மனு அளித்தது.
ஆனால், அ.தி.மு.கவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு மூலம் அ.தி.மு.க. கட்சி மற்றும் இரட்டை இலை சின்னம் ஆகிய இரண்டும் எடப்பாடி பழனிசாமி வசமானது.
இது தொடர்பாக தேர்தல் ஆணையம் எழுதியுள்ள கடிதத்தில், 'அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்றும், இந்த முடிவு நீதிமன்றத்தின் உத்தரவிற்கு உட்பட்டது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், கர்நாடகாவில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.