'அண்ணாமலை மீது வழக்கு தொடர்வேன்' - கனிமொழி எம்.பி பேட்டி

'அண்ணாமலை மீது வழக்கு தொடர்வேன்' - கனிமொழி எம்.பி பேட்டி
'அண்ணாமலை மீது வழக்கு தொடர்வேன்' - கனிமொழி எம்.பி பேட்டி

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு பொய்யானது

தி.மு.க தலைவர்கள் மீது அவதூறு பரப்பும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன் என தி.மு.க. எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி, சங்கரப்பேரி பகுதி திடலில் புத்தகக் காட்சி, ஏப்ரல் 21ம் தேதி முதல் மே 1ம் தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது. ஏப்ரல் 28ம் தேதி முதல் மே 1-ம் தேதி வரை, நெய்தல் கலைத் திருவிழாவும், இந்த புத்தகக் காட்சியுடன் இணைந்து 4 நாட்கள் நடைபெறுகிறது. 

இதைத்தொடர்ந்து, புத்தகக் காட்சி நடைபெறும் மைதானத்தை பார்வையிட்ட தி.மு.க. எம்.பி., கனிமொழி, பிரம்மாண்ட பலுானை பறக்க விட்டு விழாவை தொடங்கி வைத்தார்.

பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தி.மு.க. எம்.பி. கனிமொழி, "நெய்தல் கலைத் திருவிழாவில் தூத்துக்குடி மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 300-க்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலைஞர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்த உள்ளனர். 

இதில், கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், பறையாட்டம், குச்சியாட்டம், துடும்பாட்டம், பொய்க்கால் குதிரை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

நெய்தல் கலை விழாவில் ஒரு பகுதியாக தூத்துக்குடியின் சிறப்பு உணவுகளுடன் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த பாரம்பரிய உணவுகளும் காட்சிப்படுத்தப்பட உள்ளது. 

புத்தகக் காட்சியில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் விற்பனைக்காக வைக்கப்பட உள்ளன. புத்தகத் திருவிழாவின் ஒரு பகுதியாக தினமும் பல்வேறு சிறப்பு விருந்தினர்கள் பங்குபெறும் சொற்பொழிவுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். இதில், தூத்துக்குடி மாவட்டத்தின் சிறந்த புகைப்படங்களின் கண்காட்சி நடைபெறும்" என்றார்.

இதனிடையே, செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த கனிமொழி, "தி.மு.க. பைல்ஸ் என்ற பெயரில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அவதூறு குற்றச்சாட்டுகளை அள்ளி தெளித்துள்ளார். அவரது குற்றச்சாட்டு பொய்யானது. எனவே, வழக்கறிஞர் மூலம் அவருக்கு நோட்டீஸ் அனுப்ப உள்ளேன். இன்னும் ஒரு வார காலத்தில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு நஷ்ட ஈடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும்" என்றார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com