வி.பி. சிங் பிரதமராக இருந்தது 11 மாதங்கள் மட்டுமே. ஆனாலும், அவரது சாதனை மகத்தானவை.
'சென்னையில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் முழு உருவச்சிலை அமைக்கப்படும்' என்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று 110 விதியின் கீழ் முக்கிய அறிவிப்பை ஒன்றை வெளியிட்டார். அப்போது பேசிய அவர், “சமூகநீதிக் காவலர் என்றும், இந்தியா முழுதும் உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களின் பிதாமகர் என்றும் போற்றப்படுவர் வி.பி.சிங்.
உத்தரப்பிரதேச மாநிலம் அகமதாபாத் மாவட்டத்தில் மிகப்பெரிய ஜமீன்தாரரான ராஜா தயா பகவதி பிரதாப் சிங் என்பவருக்கு மகனாகப் பிறந்தவர்தான் வி.பி.சிங். ஆடம்பர வாழ்க்கையை வெறுத்து, கல்லூரி படிக்கும் காலத்திலேயே காந்திய இயக்கத்தில் ஈடுபட்டு, சர்வோதயச் சமாஜில் இணைந்தார்.
பூமிதான இயக்கத்தில் பங்கெடுத்து, தனது நிலங்களை பொதுமக்களுக்குத் தானமாக கொடுத்தார். அப்படிப்பட்ட அந்த மாமனிதர் 1969ம் ஆண்டு உத்திரப்பிரதேசத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வென்று, முதலமைச்சர் ஆனார்.
அது மட்டுமல்ல, மத்திய வர்த்தக அமைச்சர், நிதி அமைச்சர் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் என பல்வேறு பதவிகளை வகித்தார். நிறைவாக, இந்தியாவின் பிரதமராகவும் ஆனார். அவர், பிரதமராக இருந்தது 11 மாதங்கள் மட்டுமே. ஆனாலும், அவரது சாதனை மகத்தானவை.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோது பட்டியலின - பழங்குடியினருக்கு மத்திய அரசு பணியில் தனி இடஒதுக்கீடு வழங்கியது. ஆனால், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கவில்லை.
இந்த நிலையில், மக்கள் தொகைக்கு ஏற்ப, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்க அமைக்கப்பட்ட 2வது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்தான் பி.பி.மண்டல் தலைமையிலான ஆணையம்.
சமூக ரீதியாகவும், கல்வியிலும் பின் தங்கிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு, மத்திய அரசு பணியில் 27 சதவிகித இடஒதுக்கீட்டை வழங்கலாம் என்று பி.பி.மண்டல் பரிந்துரையின் உத்தரவை அமல்படுத்திய சமூகநீதிக் காவலர்தான் வி.பி.சிங்.
மேலும், சென்னையில் அமைந்துள்ள உள்நாட்டு விமான முனையத்துக்குக் காமராஜர் பெயரை சூட்டியவர் வி.பி.சிங். அதேபோல, பன்னாட்டு விமான நிலையத்திற்கு அண்ணாவின் பெயரை சூட்டியவர் வி.பி.சிங்.
எனவே, ஒப்பற்ற தலைவர் வி.பி.சிங்-ன் நினைவைப் போற்றும் வகையிலும், அவருக்கு தமிழ் சமுதாயத்தின் நன்றியைத் தெரிவிக்கும் வகையிலும், சென்னையில் அவரது முழு உருவச்சிலை அமைக்கப்படும்' என்றார்.