'2 வார்த்தைதான் எக்ஸ்ட்ராவா பேசறேன்' - வானதி, சபாநாயகர் உரையாடலால் கலகலத்த சட்டமன்றம்
’உடனே முடிக்க சொல்றீங்களே ஐயா இரண்டு வார்த்தைதான் எக்ஸ்ட்ரா பேசுறேன்’ என வானதி கேட்க மீண்டும் பேச அனுமதிக்கப்பட்டது.
சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழ் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கிற்கு சென்னையில் முழு உருவச்சிலை நிறுவப்படும் என்று அறிவித்துள்ளார்.
அப்போது பேசிய அவர், வி.பி.சிங் பிரதமராக இருந்தது 11 மாதங்கள்தான் என்றாலும் அவர் செய்த சாதனைகள் மகத்தானது என்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டை பெற்றுத் தந்தவர் வி.பி.சிங் எனக்கூறி வி.பி.சிங்கை சமூகநீதிக் காவலர் என புகழாரம் சூட்டி பேசினார்.
மேலும் முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கிற்கு சென்னையில் முழு உருவச்சிலை நிறுவப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இதனை வரவேற்று சட்டமன்ற உறுப்பினர்கள் பேசினர். இதுபற்றி பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் ’இந்த அறிவிப்பினை பாரதிய ஜனதா கட்சி வரவேற்கிறது. ‘சமூக நீதி’ எனப் பேசிக் கொண்டிருக்கும்போதே குறுக்கீட்டு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு நன்றி எனக் கூறி வானதியின் உரையை முடிக்க முயன்றார்.
’உடனே முடிக்க சொல்றீங்களே ஐயா. இரண்டு வார்த்தை தான் எக்ஸ்ட்ரா பேசுறேன்’ என வானதி கேட்க மீண்டும் பேச அனுமதிக்கப்பட்டது. வானதி கூறும்போது, ’இந்தியாவில் உயர்ந்த பதவியில் இருக்கும் பிரதமரே ஒரு பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்தான். அதுமட்டுமில்லாமல் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு சட்ட ரீதியான அங்கீகாரத்தை பா.ஜ.க கொடுத்திருக்கிறது’ என்றார்.
மீண்டும் குறுக்கிட்ட சபாநாயகர், ’வி.பி.சிங் கொண்டு வந்துள்ள இடஒதுக்கீட்டிற்கு வரவேற்பு, அதற்கு தொடர்புடைய வார்த்தையை மட்டும் பேசுங்கள்’ எனக் கூற, வானதி ‘வி.பி.சிங் எந்த சமூக நீதியை இந்தியாவில் செயல்படுத்த வேண்டுமென ஆக்கப்பூர்வமான திட்டங்களை கொண்டு வந்தாரோ அதை மத்தியில் இருக்கிற அரசாங்கம் வழிநடத்துகிறது. அதற்காக இந்த தீர்மானத்தை நாங்கள் வரவேற்கிறோம்’ எனக் கூறி அமர்ந்தார்.