எடப்பாடி பழனிசாமி தரப்பில் அ.திமுகவின் அன்பரசன் போட்டியிடும் நிலையில் ஓ.பன்னீர்செல்வம், அதே தொகுதியில் நெடுஞ்செழியன் என்பவரை வேட்பாளராக அறிவித்துள்ளார்.
கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் அடுத்த மே 10ம் தேதி ஒரேகட்டமாக நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. கர்நாடகாவில் கோலார் தங்கவயல், காந்தி நகர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட தொகுதிகளில் சுமார் 15 லட்சம் தமிழர்கள் வசித்து வருகின்றனர். தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் எம்.ஜி.ஆர் ஒருமுறை தேர்தல் பிரசாரம் செய்துள்ளார். கர்நாடகாவில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு 4 முறை வெற்றி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்போது நடைபெறும் கர்நாடக தேர்தலில் பா.ஜ.க கூட்டணியில் அ.தி.மு.க போட்டியிட விரும்பியது. இது தெரிந்தும் அ.தி.மு.க-விற்கு தமிழர்கள் வாழும் பகுதிகளில் தொகுதி ஒதுக்காமல் வேட்பாளரை அறிவித்தது பா.ஜ.க. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 222 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க அறிவித்தது. அ.தி.மு.க-விற்கும் தொகுதி ஒதுக்கவில்லை.
இந்நிலையில் புலிகேசி நகர் தொகுதியில் பா.ஜ.க-வை எதிர்த்து அ.தி.மு.க கர்நாடகா மாநில அவைத் தலைவர் டி.அன்பரசனை களமிறக்கியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. கடந்த சட்டமன்ற தேர்தலில் 7 தொகுதிகளில் அ.தி.மு.க போட்டியிட்ட நிலையில், தற்போது புலிகேசி நகர் தொகுதியில் மட்டும் அ.தி.மு.க போட்டியிடுகிறது. எடப்பாடி பழனிசாமி தரப்பில் அ.தி.மு.க-வின் அன்பரசன் போட்டியிடும் நிலையில்,
தற்போது ஓ.பன்னீர்செல்வம், அதே புலிக்கேசி தொகுதியில் நெடுஞ்செழியன் என்பவரை வேட்பாளராக அறிவித்து களமிறக்கியுள்ளார். இது மட்டுமின்றி ஒ.பன்னீர் செல்வம் தரப்பிலிருந்து அ.தி.மு.க சார்பில் கோலார் தங்க வயல் தொகுதியில் அனந்தராஜ் என்பவரும், காந்தி நகர் தொகுதியில் குமார் என்பவரும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.