புதிதாக 249 அறிவிப்புகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டார்
தமிழக சட்டப்பேரவையில் இன்று இந்து சமய அறநிலையத்துறை மீதான மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்தில், 249 புதிய அறிவிப்புகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டார்.
தமிழக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்து சமய அறநிலையத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் இன்று நடைபெற்றது. இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு 249 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதில், 'ராமேசுவரம் அருள்மிகு இராமநாத சுவாமி திருக்கோயிலுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில் ரூ.50 கோடி அரசு மானியம் வழங்கப்படும், 22 திருக்கோயில்களின் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ரூ.39.83 கோடியில் குடியிருப்புகள் கட்டப்படும், திருவண்ணாமலை மற்றும் சமயபுரம் திருக்கோயில்களின் கோபுரங்கள் ரூ. 20.92 கோடியில் வண்ணங்கள் ஒளிரும் வகையில் வண்ண விளக்குகள் அலங்கரிக்கப்படும்' என்றும் தெரிவித்தார்.
'2 ஆயிரம் திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு மாத ஊக்கத் தொகை ரூ.1,000 வழங்கப்படும்' என்றும், 'ஓய்வுபெறும் திருக்கோயில் பணியாளர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.3,000 லிருந்து ரூ.4,000ஆக உயர்த்தியும் பொங்கல் கொடையாக ரூ.1000 வழங்கப்படும்' என்றும் தெரிவித்தார்.
'மானசரோவர் புனிதத் தலத்திற்கு முதன்முறையாக ஆன்மீகப் பயணம் செல்லும் 500 ஆன்மீக அன்பர்களுக்கு வழங்கி வந்த அரசு மானியம் ரூ.40,000 லிருந்து ரூ.50,000 ஆக உயர்த்தி வழங்கப்படும். அதேபோல, முக்திநாத் புனிதத் தலத்திற்கு முதன்முறையாக ஆன்மீக யாத்திரை செல்லும் 500 ஆன்மீக அன்பர்களுக்கு வழங்கி வந்த அரசு மானியம் தலா ரூ.10,000 லிருந்து ரூ,25,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்' என்றார்.
'745 திருக்கோயில்களில் ரூ.331 கோடியில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும்,16 திருக்கோயில்களில் ரூ.7.20 கோடியில் புதிய திருத்தேர்கள் செய்யப்படும் என்றும், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிப் பெண்கள், மூத்த குடிமக்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுடன் வருபவர்கள் விரைவு தரிசனம் செய்யும் வகையில் தனி வரிசை ஏற்படுத்தப்படும்' என்றார்.