'உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டு' - அண்ணாமலைக்கு கெடு விதித்து நோட்டீஸ் அனுப்பிய உதயநிதி

'உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டு' - அண்ணாமலைக்கு கெடு விதித்து நோட்டீஸ் அனுப்பிய உதயநிதி
'உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டு' - அண்ணாமலைக்கு கெடு விதித்து நோட்டீஸ் அனுப்பிய உதயநிதி

48 மணி நேரத்தில் அண்ணாமலை மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லையென்றால், ரூ.50 கோடி இழப்பீடு வழங்கவேண்டும்

'DMK Files என்ற தலைப்பில் அவதூறான, உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ள தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கேட்கவேண்டும்.  இல்லையெனில், ரூ.50 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்' என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினின் குடும்பத்தில் உள்ளவர்களின் சொத்துப்பட்டியலை அன்மையில் வெளியிட்டு இருந்த அண்ணாமலை, ‘’2008-2013 வரை உதயநிதி, ரெட்ஜெயண்ட் நிறுவனம் மூலம் 300 கோடி ரூபாய்க்கு படம் எடுத்து இருக்கிறார். இதற்கு பணம் எங்கே இருந்து வந்தது? தற்போது ரெட் ஜெயண்ட் நிறுவனத்தில் மதிப்பு 2,000 கோடி ரூபாய்’’ என தெரிவித்து இருந்தார். 

இந்த நிலையில், சென்னையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி இந்த புகாரை திட்டவட்டமாக மறுத்துள்ளார். உதயநிதி பேசுகையில், ‘’2007-22 வரை திரைத்துறையில் பயணித்து இருக்கிறேன். 4 மாதங்களாக அதிலிருந்து விலகி இருக்கிறேன். 

கடந்த 15 ஆண்டுகளாக ரெட்ஜெயண்ட் இயங்கிக் கொண்டு இருக்கிறது. 15 நேரடி படங்களைத் தயாரித்து இருக்கிறேன். 15 படங்களில் நடித்து இருக்கிறேன். ஆனால், ரெட்ஜெயண்ட் நிறுவனத்தின் மதிப்பு 2,000 கோடி ரூபாய் என்கிறார்கள். சக தயாரிப்பாளர்களுக்கு உண்மை என்னவென்று புரியும். போகிற போக்கில் எதையாவது சொல்லிவிட்டுப்போகிறார்கள். அதில் உண்மையில்லை’’ என்றார்.

இந்த நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில்  வழக்கறிஞர் வில்சன் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு ஒரு நேட்டீஸ் அனுப்பியுள்ளார். 

அதில், ’’DMK Files என்ற தலைப்பில் அவதூறான, உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுகளை அண்ணாமலை முன் வைத்துள்ளார். பொதுவெளியில் பகிரங்க மன்னிப்பு கேட்டு, அதனைச் செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகள், சமூக வலைத்தளங்கள் ஆகியவற்றில் பிரசுரிக்க வேண்டும்.

மேலும், 48 மணி நேரத்தில் அண்ணாமலை மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லையென்றால் ரூ.50 கோடி இழப்பீடு கேட்டு சிவில், கிரிமினல் வழக்குகள் தொடரப்படும். மான நஷ்ட வழக்காக ரூ.50 கோடி வழங்க வேண்டும். அது முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கப்படும்’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com