அரசியல்
உலக மக்கள் தொகை: சீனாவை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடிக்கும் இந்தியா
உலக மக்கள் தொகை: சீனாவை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடிக்கும் இந்தியா
8.045 பில்லியன் உலக மக்கள் தொகையில் இந்தியாவும், சீனாவும் மூன்றில் ஒரு பங்கிற்கு மேல் இருக்கிறது.
உலக மக்கள் தொகையில் இந்த ஆண்டு மத்தியில் சீனாவை பின்னுக்குத் தள்ளி இந்தியா முதலிடத்துக்கு வருவதாக ஐ.நாவின் மக்கள் தொகை அறிக்கை தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் சீனாவை இந்தியா முந்தும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் 142.86 கோடி பேர் உள்ளனர். சீனாவில் 142.57 கோடிப்பேர் உள்ளனர். சீனாவை விட இந்தியாவில் 29 லட்சம் பேர் அதிகம் இருப்பதாக ஐ.நா அறிக்கையில் தகவல் வெளியாகி இருக்கிறது.
340 மில்லியன் மக்கள்தொகையுடன் அமெரிக்கா தொலைதூரத்தில் மூன்றாவது இடத்தில் உள்ளது. பிப்ரவரி 2023 நிலவரப்படி இந்தத் தகவல் வெளியாகி இருக்கிறது. ஐ,நாவின் முந்தைய அறிக்கைகளைப் பயன்படுத்தி மக்கள்தொகையில் இந்தியா, சீனாவைக் கடந்து செல்லும் என்று கணித்துள்ளனர். இந்தியா மற்றும் சீனாவில் இருந்து வெளிவரும் தகவல்கள் நிச்சயமற்ற தன்மையைக் கொண்டுள்ளது எனவும் கூறப்படுகிறது. இந்தியாவின் கடைசி மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011-ல் நடத்தப்பட்டது. 2021-ல் நடைபெறவிருந்த அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பு தாமதமாகிவிட்டது.
8.045 பில்லியன் உலக மக்கள் தொகையில் இந்தியாவும், சீனாவும் மூன்றில் ஒரு பங்கிற்கு மேல் இருக்கிறது. மக்கள்தொகை வளர்ச்சி இந்தியாவை விட சீனாவில் மிக வேகமாக குறைந்து வருகிறது. சீனாவின் மக்கள்தொகை முதல்முறையாக வீழ்ச்சியடைந்துள்ளது. இந்தியாவின் வருடாந்திர மக்கள்தொகை வளர்ச்சி 2011 முதல் சராசரியாக 1.2% ஆக உள்ளது. இது முந்தைய 10 ஆண்டுகளில் 1.7% ஆக இருந்தது.