தூத்துக்குடி: நள்ளிரவில் காங்கிரஸ் நிர்வாகி கடத்தல்- தி.மு.க பிரமுகரின் கார் டிரைவருக்கு தொடர்பு?

தூத்துக்குடி: நள்ளிரவில் காங்கிரஸ் நிர்வாகி கடத்தல்- தி.மு.க பிரமுகரின் கார் டிரைவருக்கு தொடர்பு?
தூத்துக்குடி: நள்ளிரவில் காங்கிரஸ் நிர்வாகி கடத்தல்- தி.மு.க பிரமுகரின் கார் டிரைவருக்கு தொடர்பு?

தி.மு.க பிரமுகரின் கார் டிரைவர் என்பதால் போலீசார் மிகக் கவனமாக விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள்.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள மழவராயநத்தம் பகுதியை சேர்ந்தவர் 42 வயதான மரியராஜ். இவர் தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி ஊடகப்பிரிவு செய்தி தொடர்பாளராக உள்ளார். ஸ்ரீவைகுண்டம் தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ அமிர்தராஜின் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தின் பொறுப்பாளராகவும் இருக்கிறார். நேற்று முன்தினம் இரவு இவர் தனது காரில் பெருங்குளம் சென்று விட்டு ஆழ்வார்திருநகரிக்கு வந்து கொண்டு இருந்தார். 
சிவராமமங்கலம் பகுதியில் வந்தபோது கார் பழுதடைந்து நின்றதாக சொல்லப்படுகிறது. அப்போது அங்கு வந்த சிவராமமங்கலத்தை சேர்ந்த வீரசங்கிலி (50), சுங்கநாதபுரத்தை சேர்ந்த பரமசிவன் (27) ஆகியோர் திடீரென்று மரியராஜை தாக்கி, காரில் கடத்திச் சென்றனர். பின்னர் அவரது குடும்பத்தினருக்கு போன் செய்து, ரூ.20 லட்சம் தந்தால் தான் மரியராஜை விடுவிடுப்போம் என்று மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மரிய ராஜன் உறவினர்கள் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர்கள் அன்னராஜ் (ஸ்ரீவைகுண்டம்), மேரி ஜெமிதா (ஏரல்), சப்-இன்ஸ்பெக்டர்கள் பெபின் செல்வ பிரிட்டோ, செல்வம் உள்பட 20-க்கும் மேற்பட்ட போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 
சிவராமமங்கலம் காட்டுப்பகுதியில் ஒரு கார் நின்றது. போலீசாரைப் பார்த்ததும் காரின் அருகில் நின்ற பரமசிவன், வீரசங்கிலி ஆகியோர் தப்பி ஓடினார்கள். போலீசார் துரிதமாக செயல்பட்டு வீரசங்கிலியை பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து காரில் காயங்களுடன் இருந்த மரியராஜை மீட்டனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இது பற்றி மறியராஜின் உறவினர்களிடம் பேசினோம், "நேற்று முன்தினம் இரவு 12 மணிக்கு மேல் ஒரு போன் வந்தது. போனில் பேசியவர் உங்கள் மருமகன் எனது பைக் மீது காரை கொண்டு மோதி விட்டார். எனவே பைக் சேதமானதற்கு பணம் வேண்டும் என்று கேட்டார். சரி பணம் கொண்டு வருகிறேன் எங்கு வரவேண்டும் என்று கேட்டேன். அப்புறம் பேசியவர்கள் 20 லட்ச ரூபாய் வேண்டுமென்று கேட்டார்கள். அதற்குப் பிறகுதான் இது கடத்தல் நாடகம் என்று தெரிந்தது. 
உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தோம். போலீசார் அதிரடியாக களம் இறங்கி நடவடிக்கை எடுத்து மிரட்டல் பேர்வழிகளை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு முன்னாள் தி.மு.க பிரமுகரின் கார் டிரைவர். எனவே போலீசார் இந்த விவகாரத்தில் தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்பது எங்களது கோரிக்கை" என்றார்கள்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் தி.மு.க பிரமுகரின் கார் டிரைவர் என்பதால் போலீசார் மிகக் கவனமாக விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com