அதிமுக, பாஜக வேட்பாளரை எதிர்த்து களம் காணும் சூழல் உருவாகியுள்ளது.
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. புலிகேசி தொகுதியில் அதிமுக சார்பாக அன்பரசன் போட்டியிடுவதாக அதிமுக த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் பாஜக கூட்டணியில் இருந்தபோதும் கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிடுகிறது. புலிகேசி நகர் தொகுதியில், பாஜக சார்பில் முரளி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக சார்பில் அன்பரசன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிட, அ.தி.மு.க.,வுக்கு 'சீட்' ஒதுக்க, பா.ஜ., மறுத்து விட்டதால், தனித்து போட்டியிடுவது குறித்து, மாவட்ட செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசித்து இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
பெங்களூரு அடுத்துள்ள புலிகேசி நகரில் போட்டியிடும் டி.அன்பரசன் கர்நாடக மாநில அதிமுக அவைத்தலைவராக இருக்கிறார். கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 10ம் தேதி நடைபெற உள்ளது. இதில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து 2 அல்லது 3 தொகுதிகளில் போட்டியிட அதிமுக விருப்பம் தெரிவித்து இருந்தது. அதற்காக இறுதி வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிடும் வரை அதிமுக காத்திருந்தது. ஆனால், அதிமுக எதிர்பார்த்தபடி பாஜக கூட்டணிக்கு சீட் ஒதுக்கவில்லை. இதனால் அதிமுக புலிகேசி நகர் தொகுதியில் தங்களது வேட்பாளரை களமிறக்கி உள்ளது. இதனால், அதிமுக, பாஜக வேட்பாளரை எதிர்த்து களம் காணும் சூழல் உருவாகியுள்ளது.