கரூர் : கோடையில் ஒரு நொடிகூட மின்தட்டுப்பாடு இருக்காது' - அமைச்சர் செந்தில் பாலாஜி

கரூர் : கோடையில் ஒரு நொடிகூட மின்தட்டுப்பாடு இருக்காது' - அமைச்சர் செந்தில் பாலாஜி
கரூர் : கோடையில் ஒரு நொடிகூட மின்தட்டுப்பாடு இருக்காது' - அமைச்சர் செந்தில் பாலாஜி

புதிதாக எந்த ஒரு டாஸ்மாக் கடையையும் திறக்கும் எண்ணம் இல்லை

கோடை காலத்தின் போது தமிழகத்தில் ஒரு நொடிகூட மின்தட்டுப்பாடு இருக்காது. அனைத்து பகுதிகளுக்கும் தடையில்லாத மின்சாரம் வழங்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டுள்ளது என்று மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் ரூ 10 கோடி மதிப்பீட்டில் சாலை வசதி, சமுதாயக் கூடம், மயான கொட்டகை உள்ளிட்ட பணிகளைத் தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது, 'தேர்தலில் அறிவித்தபடி, தமிழகத்தில் ஏற்கனவே, 96 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. தற்போது, தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும்.

அந்த வகையில், எந்தெந்த ஊரில் எந்தெந்த கடைகள் மூடலாம் என்று ஆய்வு செய்யப்பட்டு அந்தக் கடைகள் மூடப்படும். இவை எல்லாம் சேர்த்து மொத்தம் 596 டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளது. புதிதாக எந்த ஒரு டாஸ்மாக் கடையையும் திறக்கும் எண்ணம் இல்லை. ஒரு சில பகுதிகளில் இருந்து, ஒரு சில காரணங்களுக்காக, இடமாற்றம் செய்யப்படுவது வழக்கம். ஆனால், புதிய டாஸ்மாக் கடை திறப்பதாகச் சிலர் தவறாகப் புரிந்து கொள்கின்றனர்.

தற்போது, கோடைகாலம் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த நிலையில், தற்போது, மின் தடை ஏற்படாத வண்ணம் சீரான மின்விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது. மின்தடை ஏற்படும் என மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை.

தேவைக்கு உரிய மின்சாரம் கைவசம் உள்ளது. இன்னும் சொல்லப்போனால், கூடுதலாகவே மின்சாரம் கையிருப்பில் உள்ளது. காற்றாழை மின்சாரம் இன்னும் ஒரு சில வாரங்களில் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. மின்துறை தொடர்பாகப் புகார் ஏதும் இருந்தால், மின்னகம் சேவை மைய எண்ணுக்கு தெரிவித்தால் உடனே சரி செய்யப்படும்' என்றார். 

இதனிடையே, அமைச்சர் செந்தில் பாலாஜி தனது டுவிட்டர் பதிவில், தமிழக வரலாற்றில் முதல்முறையாக ஏப்ரல் 13ம் தேதி 40 கோடியூனிட்டுகள் மின்நுகர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தேவை எவ்வித மின் தடையுமின்றி ஈடுசெய்யப்பட்டது. இதற்கு முந்தைய உச்சபட்ச நுகர்வு ஏப்ரல் 12ம் தேதி 39.92 கோடி யூனிட்டாக இருந்தது எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com