'போலீஸ் ஆவதே இலட்சியக் கனவு’: சட்டப் போராட்டம் நடத்தும் திருநங்கை யாழினி

'போலீஸ் ஆவதே இலட்சியக் கனவு’: சட்டப் போராட்டம் நடத்தும் திருநங்கை யாழினி
'போலீஸ் ஆவதே  இலட்சியக் கனவு’: சட்டப் போராட்டம் நடத்தும் திருநங்கை யாழினி

மற்றவர்களுடன் போராடி ஜெயிக்க முடியவில்லை. இதனால், எங்களது சமூகம் பின்னுக்கு செல்லும்

தேசிய திருநர் தினமாக (திருநங்கை மற்றும் திருநம்பி) ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதி திருநங்கை மற்றும் திருநம்பி மக்கள் கொண்டாடி வருகின்றனர். 
இந்நிலையில் தஞ்சாவூரை சேர்ந்த திருநங்கை 27 வயதான யாழினி போலீஸ் வேலைக்கான இலட்சியக்  கனவுடன் சட்டப் போராட்டத்தை கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தி வருகிறார். தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா, உம்பளப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் திருநங்கை யாழினி. இவர் பி.இ மெக்கானிக் படித்துள்ளார். இவரது தாயார் இறந்துவிட்ட நிலையில், இவர் தஞ்சையை அடுத்த மானோஜிபட்டியில் சக திருநங்கைகளுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 2020-21 ஆம் ஆண்டில் நடைபெற்ற இரண்டாம் நிலை போலீஸ் தேர்வுக்கு விண்ணப்பித்து 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்று பின்னர் தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் 2021ல் நடைபெற்ற உடற்தகுதி தேர்வில் கலந்து கொண்டார். அதில்,158.5 சென்டிமீட்டர் உயரம் இருந்ததால் காவல்துறை அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டார்.
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் யாழினி வழக்கு தொடர்ந்தார். இடைக்கால உத்தரவு பெற்று மீண்டும் 2021 செப்டம்பர் மாதம் திருச்சியில் நடைபெற்ற உடற்தகுதி தேர்வில் கலந்துகொண்டு தேர்ச்சி பெற்றுள்ளார். ஆனால், இதுவரை அவருடைய மதிப்பெண்களை வெளியிடப்படாமல் அரசால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இதனையடுத்து அவரது  முயற்சியை கைவிடாமல் மீண்டும் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு தயாராகி வருகிறார். 
இதுகுறித்து திருநங்கை யாழினி கூறுகையில் ’’எனது லட்சியமே போலீஸ் ஆவது என்ற கனவு மட்டுமே. இதற்காக கடந்த இரண்டு வருடங்களாக போராடி வருகிறேன்.  புத்தகங்கள் வாங்கக்கூட காசு இல்லாமல் எனது நண்பர்கள் வாங்கிக் கொடுத்தப் புத்தகங்களைப் பெற்று போலீஸ் வேலைக்கு படித்து முன்னுக்கு வர வேண்டும் என்று போராடி வருகிறேன். எங்களுடைய முக்கிய கோரிக்கையாக திருநங்கை, திருநம்பி மக்களுக்கான தனி இட ஒதுக்கீடு 1 சதவீதம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வழங்க வேண்டும்.
மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக தமிழகத்தில் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் படித்த திருநங்கைகள்- திருநம்பிகள் அதிகம் பேர் உள்ளனர். பக்கத்து மாநிலமான கர்நாடகா அரசு திருநங்கைகள், திருநம்பிகளுக்கு 1 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கியுள்ளனர். தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக உள்ளது. இலவச அடையாள அட்டை, மாத உதவித்தொகை ஆகியவை வரவேற்கப்பட வேண்டியவை. ஆனால், அடிப்படைத் தேவையான கல்வி, வேலைவாய்ப்பில் 1 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதுதான் எங்களது முக்கியமான நீண்ட கால கோரிக்கை. அவை நிறைவேற்றப்பட்டால் பிச்சை எடுப்பது, பாலியல் தொழிலில் ஈடுபடுவது போன்ற செயல்களில் அவசியம் இருக்காது.
பெற்றோர்கள், சமூக ஏற்பு என்ற நிலை ஏற்படும். சமூக ஏற்பு என்பது அரசாங்கத்திடமிருந்து வரவேண்டும். 1 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கினால் மட்டுமே தீர்வு ஏற்பட்டு வேலைவாய்ப்பு பெற்று நாங்கள் முன்னேற முடியும். பெற்றோர்களும் எங்களை ஏற்றுக் கொள்வார்கள். திருநங்கை, திருநம்பி மக்கள் வேலைவாய்ப்பை பெறுவதற்கு சட்டப் போராட்டத்தை கடக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. கடந்த குரூப்-4 தேர்வில் நூற்றுக்கும் மேற்பட்ட திருநங்கைகள் தேர்வு எழுதி அதில் 15 பேர் அதிக மதிப்பெண் பெற்றுள்ளனர். இவர்களுக்கு இதுவரை எந்த வேலை வாய்ப்பும் கிடைக்கவில்லை. எங்களுடைய திருநங்கைகள் என்ற பாலினப் பெண்கள் எம்.பி.சி, ஓ.பி.சி பிரிவிலும் இருக்கின்றனர்.  இதனால், ஒடுக்கப்பட்ட சமூகத்தில் கஷ்டப்பட்டுப் படித்துப் போராடி மற்றவர்களுடன் போராடி ஜெயிக்க முடியவில்லை. இதனால், எங்களது சமூகம் பின்னுக்கு செல்லும்’’என அவர் வருத்தத்துடன் தெரிவித்தார். 

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com