கடந்த 1 வருடமாக வாடகை கட்டவில்லை என நோட்டீஸ் பெறுகிற நிலையில் இருக்கிறேன்
'சென்னை நந்தனத்தில் நான் குடியிருக்கும் அரசு வீட்டிற்கு கடந்த ஒரு வருடமாக வாடகை கட்டமுடியவில்லை' எனத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தி.மு.க. தலைவர்கள் மீது சொத்துப்பட்டியல் குறித்த விவரங்களை நேற்று வெளியிட்டார். இதற்கு தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, பதில் கொடுத்துள்ள நிலையில், தற்போது தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது, '50 ஆண்டு பொது வாழ்க்கையில் 2முறை சட்டமன்ற உறுப்பினர், 1 முறை மக்களவை உறுப்பினர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருக்கும் நான், சென்னை, நந்தனத்தில் உள்ள தமிழ்நாடு அரசு அடுக்குமாடி குடியிருப்பில் ரூ16,000 வாடகைக்குக் குடியிருக்கிறேன். கடந்த 1 வருடமாக வாடகை கட்டவில்லை என நோட்டீஸ் பெறுகிற நிலையில் இருக்கிறேன்.
4 ஆடுகளை மட்டுமே வைத்திருந்ததாகக் கூறிய, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மாதம் ஒன்றுக்கு மூன்றே முக்கால் லட்சம் வீட்டு வாடகை எப்படிக் கொடுக்க முடிகிறது? 3 லட்ச ரூபாய் கை கடிகாரமும் எப்படி அணிய முடிகிறது? இதற்கு யார் பணம் கொடுக்கிறார்கள்? இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.