‘அண்ணாமலையை பார்த்து பயப்படவில்லை’ - டி.ஜெயக்குமார் பேட்டி

‘அண்ணாமலையை பார்த்து பயப்படவில்லை’ - டி.ஜெயக்குமார் பேட்டி
‘அண்ணாமலையை பார்த்து பயப்படவில்லை’ - டி.ஜெயக்குமார் பேட்டி

தமிழகத்தில் காவல்துறையின் நிலைமை மிகவும் பரிதாபத்துக்குரியதாக உள்ளது

தி.மு.க ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காட்டமாக கூறியுள்ளதோடு ‘எங்கள் மடியில் கனம் இல்லை. ஆகையால் வழியிலேயும் பயம் இல்லை’ என அண்ணாமலைக்கு ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.

பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தி.மு.கத் தலைவர்களின் சொத்து பட்டியல் ஒன்றை நேற்று வெளியிட்டார். மேலும் அ.தி.மு.க தலைவர்களின் பட்டியலும் வெளியிடப்படும் என்று தெரிவித்தார். இதற்குப் பதிலடி கொடுத்த தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ‘பா.ஜ.க மீது மத்திய, மாநில அளவில் உள்ள குற்றச்சாட்டுக்களைத் திசைத்திருப்பவே இன்றைய நாடகத்தை அரங்கேற்றி உள்ளனர்’ எனச் சாடினார்.

இந்த நிலையில் இன்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், ’தி.மு.க சொத்து பட்டியலை பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார். எங்கள் மடியில் கனம் இல்லை. ஆகையால் வழியில் பயம் இல்லை. மறைமுகமாக மிரட்டல் விடுப்பது, பூச்சாண்டி காட்டுவது அ.தி.மு.க-விடம் எடுபடாது. நாங்கள் யாரை பார்த்தும் பயப்பட வேண்டியது இல்லை. அது பா.ஜ.க-வாக இருந்தாலும் சரி, மற்றவர்களாக இருந்தாலும் சரி என்று தெரிவித்தார்.

மேலும், சென்னை கோடம்பாக்கத்தில் உதவி காவல் ஆய்வாளர் தாக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிக்கும் நிலையில்தான் உள்ளது. சட்டம் -ஒழுங்கு மற்றும் அடிப்படை கட்டமைப்பு ஆகிய இரண்டிலும் இந்த அரசாங்கம் தோல்வி அடைந்துள்ளது. தி.மு.க அரசில் எங்குமே அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லை. இதனால் மக்கள் கஷ்டப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

உணவு மற்றும் சரியான உறக்கம் இன்றி 24 மணி நேரமும் மக்களைக் காக்கும் வகையில் காவல்துறை செயல்பட்டு வருகிறது. அப்படிப்பட்ட காவல்துறை இன்று அடிவாங்கும் காவல்துறையாக உள்ளது. ஸ்கார்ட்லாந்து காவல்துறைக்கு இணையாகத் தமிழகக் காவல்துறை என்றால் ஒரு கம்பீரம் அ.தி.மு.க ஆட்சியில் இருந்தது. ஆனால் இன்று காக்கி சட்டை அணிந்திருப்பவர்களைப் போகிறவன், வருகிறவன் எல்லாம் அடிக்கும் நிலை தி.மு.க ஆட்சியில் ஏற்பட்டுள்ளது.

தி.மு.க ஆட்சியில் ஏன் இந்தக் காவல்துறை சீருடையை அணிந்தோம் என்று நினைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனது வேலையே போனாலும் பரவாயில்லை எனச் சென்னை தலைமைச் செயலகம் முன்பு தனது மகளுடன் போலீஸ்காரர் தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். தனது மகளுக்குத் தவறான சிகிச்சையால் கால் போனதாகவும், இதுகுறித்து முறையான விசாரணை மேற்கொள்ளவில்லை என போலீஸ்காரர் தெரிவித்துள்ளார். ஆகையால் அனைத்து துறைகளிலும் தி.மு.க  தோல்வி அடைந்துள்ளது.

கடந்த 2 ஆண்டுகளில் நெல்லையில் போலீஸ்காரர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் போலீஸ் பெண் எஸ்.ஐ ஒருவர் கழுத்தறுக்கப்பட்டுள்ளார். மேலும் காவல் நிலையங்களில் சமூக விரோதிகளைக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. திருச்சியில் உள்கட்சி பூசலில் காவல்நிலையத்தில் நாற்காலிகளைக் கொண்டு தாக்குவதும், சட்டம் ஒழுங்கை ஆளுங்கட்சியினரே கையில் எடுத்துக்கொண்டு சட்டத்திற்குப் புறம்பாகச் செயல்பட்டு வருகின்றனர்.

சட்டத்தை யார் கையில் எடுக்கிறார்களோ? அவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்காமல் கரும்புக்கரம் நீட்டினால் எப்படி இருக்கும். தி.மு.க ஆட்சிக்கு வந்த பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தொழிலாளியை கொலை செய்தார். அவருக்கு ராஜமரியாதை அளித்தனர். பொதுமக்களின் போராட்டத்திற்குப் பிறகு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த மாதிரி தமிழ்நாட்டில் அதிகாரிகள், காவல்துறையினர் தாக்கப்படுவது வழக்கமாகி விட்ட சூழ்நிலையில், காவல்துறையின் நிலை மிகவும் பரிதாபத்துக்குரிய நிலையில் உள்ளது வேதனை அளிக்கிறது. அ.தி.மு.க ஆட்சியில் சமூக விரோதிகளை ஒடுக்கி, அமைதியை ஏற்படுத்திய காவல்துறை இன்றைக்கு அடிவாங்கும் காவல்துறையாக இருப்பதைப் பார்த்தால் மனமெல்லாம் பதைபதைக்கிறது. காவல்துறைக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com