ராகுல் பதவி நீக்கத்தைக் கண்டித்து, காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர்
புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்த போராட்டத்தில், பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த, மாநில மகிளா காங்கிரஸ் தலைவி காந்தி மற்றும் துணைத் தலைவி நிஷா ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடியின் குடும்ப பெயரை அவதூறாகப் பேசியதாக, அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீது, கடந்த 2019ம் ஆண்டு அவதூறு வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கில், கடந்த மார்ச் 23 ம் தேதி குஜராத்தில் உள்ள சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில், ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. இந்த தண்டனையை எதிர்த்து, ராகுல் தரப்பில் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
ராகுல் பதவி நீக்கத்தைக் கண்டித்து, காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, புதுச்சேரி காங்கிரஸ் கட்சி சார்பில், கடந்த 7ம் தேதி அண்ணாசாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் பலரும் கலந்து கொண்டனர். அப்போது, பேசிய புதுச்சேரி மகிளா காங்கிரஸ் தலைவி காந்தி, துணை தலைவி நிஷா ஆகியோர் பிரதமர் மோடியை மிரட்டும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பான புகாரின் பேரில், பெரிய கடை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதில், சட்ட விரோதமாகக் கூடுதல், ஆபாசமாகப் பேசுதல் மற்றும் கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில், புதுச்சேரி மகிளா காங்கிரஸ் தலைவி காந்தி மற்றும் துணை தலைவி நிஷா ஆகியோர் முக்கியக் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.