தமிழக முதலமைச்சரின் பசுமை இயக்கத்தை நடைமுறைப்படுத்த 25 பசுமைப் பள்ளிகள் தேர்வு செய்யப்பட உள்ளன
தமிழக சட்டப்பேரவையில் தமிழக சுற்றுச்சூழல் துறை சார்பில் 7 முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அதில், பசுமைப் பள்ளிகள் மற்றும் மஞ்சப்பை விருதுகள் உள்ளிட்டவை முக்கியத்துவம் பெற்றுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023 -2024-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை கடந்த மார்ச் 20ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. 21ம் தேதி வேளாண்மை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து நிதிநிலை அறிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்றது.
இந்த நிலையில், இன்று நடைபெற்ற சட்டப்பேரவையில், வனத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் சுற்றுச்சூழல்துறை உள்ளிட்ட துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில், சுற்றுச்சூழல் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு : சுற்றுச்சூழல்துறை சார்பில் மாண்புமிகு முதலமைச்சரின் நீர்நிலை பாதுகாவலர் விருது வழங்கப்படும் என்றவர்,
அடுத்து, தமிழக முதலமைச்சரின் பசுமை இயக்கத்தை நடைமுறைப்படுத்த 25 பசுமைப் பள்ளிகள் தேர்வு செய்யப்பட உள்ளன. இந்த பள்ளிகளில் ஆற்றல் திறனை மேம்படுத்த சூரிய ஆற்றலின் உதவியுடன் சூரிய சக்தி மோட்டார் பம்புகள் பயன்படுத்துதல், பழங்கள் தரும் மரங்கள் நடப்படும் என்றவர்,
மேலும், கழிவு நீரை மறுசுழற்சி செய்தல், மக்கும் உரம் தயாரித்தல், காய்கறி மற்றும் மூலிகைத் தோட்டங்கள் உருவாக்குதல், மழை நீர் சேகரிப்பை நடைமுறைப்படுத்துதல், நெகிழி இல்லாத சுற்றுச்சூழலை உருவாக்குதல் மற்றும் மற்ற பசுமைப் பணிகளை இப்பள்ளிகள் மேற்கொள்ளும் அனைத்து மின்தேவைகளும் சூரிய ஆற்றல் உற்பத்தி மூலம் பெறப்படும். இந்த திட்டங்களுக்காக, ஒரு பள்ளிக்கு தலா ரூ.20 லட்சம் வீதம் 25 பள்ளிகளுக்கு தமிழக அரசு ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
மேலும், கழிவு உற்பத்தியாளர்கள் மற்றும் பயனர்களுக்கு இடையே கழிவுகளைப் பரிமாறிக்கொள்வதற்கு இணையவழி கழிவு பரிமாற்ற தளம் அமைக்கப்படும் என்றும், சுழற்சி பொருளாதாரத்தில் குப்பை சேகரிப்பவர்களின் பங்களிப்பினை முதன்மைப்படுத்துவதற்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படும் என்றார்.
மேலும், கடல் வாழ் பல்லூரியினங்களைப் பாதுகாக்கும் பொருட்டுப் பயன்படுத்தித் தூக்கி எறியப்படும் மீன்பிடி வலைகளைச் சேகரித்து மறுசுழற்சிக்கு அனுப்புவதற்கான திட்டம் தொடங்கப்படும் என்றும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் 8 மேம்படுத்தப்பட்ட சுற்றுச்சூழல் ஆய்வகங்களில் நுண்ணயிரியல் பகுப்பாய்வு பிரிவு ஏற்படுத்தப்படும் என்றும், தமிழ்நாடு வேளாண்மைப் பலகலைக்கழகத்துடன் இணைந்து மாசினால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் மண் தர வரைபடம் தயாரிக்கப்படும்' என்றார்.
மேலும், நிலவில் இருந்து பார்த்தாலும் கூட, தமிழ் என்று தெரியும் வகையில் 100 ஏக்கர் பரப்பளவில் மாதிரி காடு உருவாக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது என்றார்.