மக்கள் தேவைகளை நிறைவேற்ற வேண்டிய கடமை மாநிலங்களுக்கே அதிகம் உள்ளது
சென்னை அடுத்துள்ள பல்லாவரத்தில் நடைபெற்ற அரசு விழாவில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள திட்ட பணிகளைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அப்போது, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அதில், இந்தியாவில் மத்திய அரசு, மாநிலங்களின் வளர்ச்சிக்குத் தேவையான திட்டங்களைத் தொடர்ந்து நிறைவேற்றித் தரும் போது ஒட்டுமொத்த இந்தியாவும் வளம் பெறும்.
கடும் நிதி நெருக்கடியிலும் தி.மு.க. அரசு சாலைகள், பாலங்கள் போன்ற கட்டமைப்புகளுக்கு இந்த ஆண்டு ரூ.44,365 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழக நெடுஞ்சாலை ஆணையத்தால் செயல்படுத்தப்பட்டுள்ள ரூ.2,423 கோடி மதிப்பிலான 2 சாலைத் திட்டங்களைத் தொடங்கி வைத்து, ரூ.1,277 கோடி மதிப்பீட்டிலான 2 திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியுள்ளார்.
தமிழகத்தின் அடுத்தக் கட்ட வளர்ச்சிக்காக, சென்னை - மதுரவாயல் உயர்மட்டச் சாலை, சென்னை- தாம்பரம் உயர்மட்டச் சாலை, கிழக்கு கடற்கரை சாலையை நான்கு வழிச்சாலை ஆக்குதல், சென்னை – காஞ்சிபுரம் – வேலூர் நெடுஞ்சாலையையும், சென்னை - மதுரை தேசிய நெடுஞ்சாலையை 6 வழித்தடமாக மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு முக்கியத் திட்டங்கள் விரைவுபடுத்தவேண்டும்.
பிரதமர் தொடங்கி வைத்துள்ள 'வந்தே பாரத்' ரயில் தமிழகத்தின் மேற்குப் பகுதி மக்களுக்கு பேருதவியாக இருக்கும். அதுபோல், சென்னையிலிருந்து மதுரைக்கும் 'வந்தே பாரத்' ரயில் இயக்கவேண்டும். அதன் டிக்கெட் கட்டணத்தை அனைவரும் பயணம் செய்யும் வகையில் குறைக்கவேண்டும்.
தமிழகத்திற்கு பல ஆண்டுகளாக இரயில்வே துறையால் போதிய முக்கியத்துவம் தரப்படவில்லை. அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்குப் போதிய அளவு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. அந்தத் திட்டங்கள் அனைத்தும் பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமலே உள்ளது. எனவே தமிழகத்திற்கு புதிய இரயில்வே திட்டங்களை அறிவிப்பதோடு, ஏற்கனவே, அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கும் சேர்த்து நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும்.
தமிழகத்தில் அடுத்தகட்ட பொருளாதார வளர்ச்சிக்கு, பரந்தூரில் புதிய நவீன விமான நிலையம் அமைக்க உள்ளோம். அதுபோலவே, கோவை, மதுரை, திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட விமான நிலையங்களை விரிவாக்கம் செய்ய ரூ.1,894 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, நிலம் எடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்தின் 2வது கட்டப் பணிகளுக்கான மத்திய அரசின் பங்கினை வழங்கும் ஒப்புதல் கடந்த 2 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில், ரூ.9,000 கோடி செலவில் கோவையிலும், 8,500 கோடி ரூபாய் செலவில் மதுரையிலும் மெட்ரோ இரயில் திட்டம் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டங்களுக்கு மத்திய அரசு விரைந்து ஒப்புதல் தரவேண்டும்.
மக்கள் தேவைகளை நிறைவேற்ற வேண்டிய கடமை மாநிலங்களுக்கே அதிகம் உள்ளது. எனவே, மாநிலங்களின் திட்டங்களை நிறைவேற்ற, நிதித் தேவைகளை மத்திய அரசு விரைந்து வழங்கவேண்டும்.
பிரதமரும் ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தவர் என்பதால் எனது கோரிக்கையின் முக்கியத்துவத்தை அவர் உணர்ந்து இருப்பார் என்று நம்புகிறேன்' என்று தெரிவித்தார்.