மோடிக்கு எதிராக வாசகம் பொருந்திய 320 கருப்பு பலூன்கள் பறிமுதல்
சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பில் கருப்புக் கொடி காட்டப்படும் என்று, தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் குழுத்தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். இந்த நிலையில், காங்கிரஸ் பிரமுகர் ரஞ்சன் குமார் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது வீட்டில் இருந்து, பிரதமருக்கு எதிராக வாசகம் பொருந்திய 320 கருப்பு பலூன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பிரதமர் நரேந்திர மோடி தற்போது சென்னைக்கு வந்துள்ளார். இன்று மாலை சென்னை விமான நிலையத்தில், புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டிடத்தை திறந்து வைக்கிறார். பின்னர், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், சென்னை-கோவை இடையிலான ‘வந்தே பாரத்’ அதிவிரைவு ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
தாம்பரம்-செங்கோட்டை இடையேயான விரைவு ரயில் சேவையையும், திருத்துறைப்பூண்டி- அகஸ்தியம்பள்ளி இடையே 37 கி.மீ. தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள அகல ரயில் பாதையை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். மேலும் மயிலாப்பூர், ராமகிருஷ்ண மடத்தின் 125வது ஆண்டு விழா மற்றும் பல்லாவரத்தில் சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
இந்த நிலையில், சென்னை வந்துள்ள பிரதமர் மோடிக்கு, தமிழக அரசு சார்பிலும், தமிழக பா.ஜ.க சார்பிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆனால், அவதூறு வழக்கில் ராகுல் காந்தியின் எம்.பி பதவி நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து, பிரதமர் சென்னை வருகையின்போது காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டமும், மோடி செல்லும் அனைத்து இடங்களிலும் கருப்புக் கொடி ஏந்தி போராட்டமும் நடைபெறும் என்று, தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் குழுத்தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்து இருந்தார்.
இந்த நிலையில் மோடிக்கு எதிராக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்த தயாராகி வந்தனர். மேலும் மோடிக்கு ஏதிராக 320 கருப்பு பலூன்களை பறக்க விடவும் ரகசியமாக திட்டமிட்டனர். இந்த தகவல் அறிந்த சென்னை போலீசார், பிரதமருக்கு எதிராக வாசகம் பொருந்திய 320 கருப்பு பலூன்களை பறிமுதல் செய்தனர்.
இதனையடுத்து தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி. எஸ்.டி. பிரிவு மாநிலத் தலைவர் ரஞ்சன் குமார் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். இதேப் போல, முக்கியத் தலைவர்கள் பலர் வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.