ராகுல் காந்திக்கு அடுத்த நெருக்கடி - எம்.பி அலுவலக இணையம், போன் துண்டிப்பு
ராகுல் காந்தி டெல்லியில் உள்ள வீட்டை ஏற்கனவே காலி செய்து கொடுத்துள்ளார்
எம்.பி. பதவியில் இருந்து நீக்கப்பட்ட ராகுல் காந்திக்கு அடுத்த நெருக்கடியாக, வயநாடு எம்.பி அலுவலக இணையம் மற்றும் போன் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் கர்நாடக மாநிலம், கோலாரில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பிரச்சாரம் செய்தார். அப்போது அவதூறு பேசியதாகக் குஜராத் முன்னாள் பா.ஜ.க அமைச்சர் புர்னேஷ் மோடி என்பவர் சூரத் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதில், ராகுலுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் அனுமதியும் ரூ. 15,000 செலுத்தி ஜாமீன் பெறவும் அனுமதி வழங்கியது.
கடந்த மார்ச் 24ம் தேதி மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதற்கு காங்கிரஸ், தி.மு.க, சி.பி.எம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி கடும் கணடனம் தெரிவித்தன. ராகுல் விவகாரம் தொடர்பாக கடும் அளிமயால் நாடாளுமன்றம் பல முறை ஒத்திவைக்கப்பட்டது. நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போரட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
சூரத் நீதிமன்றம் வழங்கிய தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி மேல்முறையீடு செய்ததை அடுத்து வழக்கு விசாரணையை வரும் 13ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே டெல்லியில் வசிக்கும் அரசு பங்களாவை காலி செய்ய வேண்டும் என ராகுலுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதை அவர் ஏற்றுக் கொண்டு தனது வீட்டை காலி செய்து கொடுத்தார். இந்த நிலையில், கேரளா மாநிலம் வயநாடு தொகுதியில் உள்ள ராகுல் காந்தியின் அலுவலகத் தொலைபேசி இணைப்பு எண் 04936 - 209988 மற்றும் இணையதளச் சேவையைப் பி.எஸ்.என்.எல் நிறுவனம் துண்டித்துள்ளது.