எடப்பாடி பழனிசாமி மீது முறைகேடு புகார் எழுந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.
அ.தி.மு.க ஆட்சியின்போது மருத்துவக் கல்லூரிகள் கட்டுமானத்தில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க தமிழ்நாடு அரசு அனுமதித்துள்ளது.
தமிழகத்தில் கிருஷ்ணகிரி, திருவள்ளூர், அரியலூர் உள்பட 11 மாவட்டங்களில் தலா 150 மாணவர்கள் படிக்கும் வகையில் 4 ஆயிரத்து 80 கோடி ரூபாய் செலவில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்க கடந்த அ.தி.மு.க ஆட்சியின்போது ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த கல்லூரிகள் தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகளின்படி அமைக்கப்படவில்லை என்றும், மருத்துவக் கல்லூரிகளுக்கான கட்டிடங்கள் கட்டுவதில் ஊழல் அரங்கேறி உள்ளதாகவும், அப்போதைய பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறைகளை கவனித்து வந்த முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பொதுப் பணித்துறை தலைமை பொறியாளர் உள்ளிட்டோர் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் புகார் எழுந்தது.
இதில் எடப்பாடி பழனிசாமி தற்போது எதிர்க்கட்சி தலைவராக உள்ளதால் விசாரணை செய்ய அனுமதி வழங்குமாறு தமிழ்நாடு அரசிடம் லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மீதான முறைகேடு புகார் தொடர்பாக விசாரணை நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.
அதே சமயம் இந்த விசாரணையை சிறப்பு புலனாய்வுக்குழுவிடம் ஒப்படைக்க லஞ்ச ஒழிப்புத்துறை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு சம்மன் அனுப்பி விசாரிக்கலாம் என்றும் சாட்சியங்கள் மற்றும் ஆவணங்களை ஆராய்ந்து அதன்பேரில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.